பொங்கல் பரிசு தொகையை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வழக்கு – டிச. 19ஆம் தேதி ஒத்திவைப்பு
Pongal gift money directly credited to bank account case – adjourned to Dec. 19th
-
பொங்கல் பரிசு தொகை உள்ளிட்டவற்றையும் வங்கி கணக்கிலேயே செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல்
-
நீதிபதிகள், “நுகர்பொருள் வாணிபக்கழக கூடுதல் செயலர், ரேசன் கார்டு தாரர்களின் வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுத்தொகையை செலுத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை, டிச. 04
பொங்கல் பரிசுத் தொகுப்பின் போது வழங்கப்படும் சர்க்கரைக்கு பதிலாக ஒரு கிலோ வெல்லத்தை வழங்கவும், பொங்கல் பரிசு தொகையை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்க உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மினிமம் பேலன்ஸ் பிரச்சினை காரணமாக பயனாளிகளுக்கு முழுமையாக பணம் சேராது என வாதிடப்பட்ட நிலையில், மகளிர் உரிமைத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்துவது போல் செலுத்தலாமே என நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மானியம் உள்ளிட்டவை நேரடியாக அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவி தொகைகளும் நேரடியாக வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகை மட்டும் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. அதனுடன் பச்சரிசி, சீனி, ஏலக்காய், வேட்டி சேலை, உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
பணம் பெறுவதற்காக ஒரே நேரத்தில் மக்கள் ரேஷன் கடைகளில் கூடுவதால், நெரிசல் உள்ளிட்டவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், எனவே பொங்கல் பரிசு தொகை உள்ளிட்டவற்றையும் வங்கி கணக்கிலேயே செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் தாக்கல் செய்த மனுவில்,” “பொங்கல் பரிசுத் தொகுப்பின் போது வழங்கப்படும் சர்க்கரைக்கு பதிலாக ஒரு கிலோ வெல்லத்தை வழங்கவும், பொங்கல் பரிசு தொகையாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாயை ரேஷன் கார்டு தாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த கோரியும் கடந்த 2023ல் மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தேன். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துவது தொடர்பாக அடுத்த ஆண்டு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பின் போது சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை வழங்கவும், கரும்பு, தேங்காய் போன்றவற்றை தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வாங்கவும், பரிசுத்தொகையை ரேஷன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதையும் படியுங்கள்: தென்கொரியா : அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் ரத்து
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தலாமே? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசுத்தரப்பில், “குறைந்தபட்ச தொகை இல்லை என்பதற்காக வங்கியில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டு விடுகிறது”என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், ” மகளிர் உரிமைத் தொகையை வங்கி மூலம் வழங்குகையில் இதுவும் சாத்தியமே” என வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “நுகர்பொருள் வாணிபக்கழக கூடுதல் செயலர், ரேசன் கார்டு தாரர்களின் வங்கிக் கணக்கில் பொங்கல் பரிசுத்தொகையை செலுத்துவது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்