Home News கர்ப்பிணி பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு 3 வகை சத்துமாவுகள் – முதலமைச்சர் பிறந்தநாளில் தொடக்கம்

கர்ப்பிணி பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு 3 வகை சத்துமாவுகள் – முதலமைச்சர் பிறந்தநாளில் தொடக்கம்

0
கர்ப்பிணி பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு 3 வகை சத்துமாவுகள் – முதலமைச்சர் பிறந்தநாளில் தொடக்கம்
  • வெள்ளை நிற பாக்கெட்டுகள் 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், இளஞ்சிவப்பு நிற பாக்கெட் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நீல நிற பாக்கெட்டுகளும் வழங்கப்பட உள்ளது.
  • அங்கன்வாடி மையங்கள் மூலம் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மாற்றங்களை செய்துள்ளது தமிழக அரசு.

சென்னை, பிப். 23

தமிழகத்தில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதைப் போக்க தமிழக அரசு, சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அங்கன்வாடி மையங்கள் வாயிலாக இணை உணவாக சத்துமாவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. 2 கிலோ எடை கொண்ட இந்த சத்துமாவு பாக்கெட்டுகள் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

இதேபோல, 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்களின் ஊட்டச்சத்து நிலையை முன்னேற்ற ‘பிரதமரின் ஊட்டச்சத்து ஒருங்கிணைப்புத் திட்டம்’ மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.

மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பு அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில், தமிழகத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிய தமிழக அரசு திட்டமிட்டது.

அதன்படி, 2022-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள 38 லட்சம் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இதையும் படியுங்கள்தஜிகிஸ்தானில் தொடர்ந்து 6 நிலநடுக்கங்கள்-மக்கள் பீதி

இதில், மாநிலம் முழுவதும் 9.3 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 2022-ம் ஆண்டு மே 7-ந்தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து, மே 21-ந்தேதி நீலகிரியில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்

இதேபோல, அங்கன்வாடி மையங்கள் மூலம் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது.

அதன்படி, இந்திய தர நிர்ணயக் கழகத்தின் முத்திரையுடன் கூடுதல் சுவை, புரதச்சத்து விகிதத்தை அதிகரித்து வெள்ளை, நீலம், இளஞ்சிவப்பு ஆகிய 3 வண்ணங்களில் மாவு பாக்கெட்டுகள் வகை பிரித்து வழங்கப்பட உள்ளது.

இதில், வெள்ளை நிற பாக்கெட்டுகள் 6 மாதம் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், இளஞ்சிவப்பு நிற பாக்கெட் 2 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நீல நிற பாக்கெட்டுகளும் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய சத்துமாவு பாக்கெட்டுகள் மார்ச் 1-ந்தேதி முதல் அங்கன்வாடி மையங்கள் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.