Home செய்திகள் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரையுமே சந்திக்காதது ஏன் ?

பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரையுமே சந்திக்காதது ஏன் ?

0
பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரையுமே சந்திக்காதது ஏன் ?
prime minister modi, eps, ops

பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரையுமே சந்திக்காதது ஏன் ?

prime minister modi didnt meet eps ops why?

 

  • முக்கிய நிர்வாகிகள் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டதால், கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம்

  • பாஜக தரப்பிலோ, அதிமுக தரப்பிலோ இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை.

சென்னை, ஏப்.09

தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரையும் சந்திக்க நேரம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவர்கள் இருவரையுமே சந்தித்துப் பேசாதது அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சந்திப்பு ரத்தானது ஏன் என்பது பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.

அதிமுக – பாஜக சலசலப்புகள்

2024-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தற்போதிருந்தே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் அதிமுக – பாஜக இடையே சமீப காலமாகவே சலசலப்புகள் நிலவி வருகின்றன. இரு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகளும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டதால், கூட்டணி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

அதற்கு ஏற்றார்போல், அதிமுக கூட்டணியில் நீடித்தால், மாநில தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவேன் என அண்ணாமலை கூறியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக – அதிமுக கூட்டணி நீடிப்பதாக கூறியிருந்தார். அதை உறுதி செய்யும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவின் கருத்தை ஆமோதித்தார்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா

இந்தச் சூழலில், சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து விமானப் படை தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். சென்னையில் விமான நிலைய புதிய ஒருங்கிணைந்த முனையம், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்க விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

 பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை

தமிழ்நாடு வருகை தந்த பிரதமர் மோடியை தனித்தனியே சந்திக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரம் கேட்டிருந்தனர். அவர்கள் இருவருக்குமே நேரம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இருவரையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் வகையில் 10 நிமிடங்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிரதமர் மோடி

ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மட்டும் சந்தித்து விட்டுச் சென்ற பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர் செல்வத்தையும் தனியாகச் சந்தித்துப் பேசவில்லை. விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பிரதமர் மோடியை வரவேற்றதோடு சரி. அதன்பிறகு இருவரும் தனியாகச் சந்தித்துப் பேசவில்லை.

இதையும் படியுங்கள்சேவ் உக்ரைன் அமைப்பால் 31 குழந்தைகள் மீட்பு

அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதல் சிக்கல்களுக்கு மத்தியில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடி சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்ச்செல்வம் இடையேயான ஒற்றுமை போன்றவை பற்றி பிரதமர் விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சந்திப்பு ரத்து

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை சந்திக்க இருந்த நிலையில், சந்திப்பு ரத்தானது. இந்தச் சந்திப்பு நேரமின்மை காரணமாக ரத்தானதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜக தரப்பிலோ, அதிமுக தரப்பிலோ இதுகுறித்து விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால், பாஜக – அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜக தலைமையின் விருப்பம்

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஈபிஎஸ், ஓபிஎஸ் ஒன்றுசேர வேண்டும் என்பதே பாஜக தலைமையின் விருப்பமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால், இருவரையும் தனித்தனியாக சந்திப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்பதால், பிரதமர் மோடி இந்த சந்திப்பை தவிர்த்திருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல்

மேலும், கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு, அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து பேசிக்கொள்ளலாம் என பாஜக தலைமை நினைப்பதாகவும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது கர்நாடக தேர்தல் தொடர்பான பணிகளில் இருப்பதால் , ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸை சந்திப்பதை பிரதமர் மோடி தள்ளி வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்வி

எது எப்படியோ, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரையுமே பிரதமர் மோடி சந்திக்காதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. ஈபிஎஸ் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றும் கூட, ஓபிஎஸ்ஸுக்கு இணையாகவே எடப்பாடி பழனிசாமியும் நடத்தப்படுவது ஈபிஎஸ் தரப்பினருக்கு லேசாக அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதை மறுக்க முடியாது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.