
வி ஏ ஓ, போலீசார் மீது லாரியை ஏற்ற முயன்ற மணல் கடத்தல் கும்பல் | இருவர் மீது வழக்கு
Sand smuggling gang tried to load a lorry on VAO, police |Case against two
-
மணல் அள்ளியவர்களிடம் ஆயக்குடி பகுதிக்கான பாஸ் எதுவும் இல்லாததும் வேறொரு பகுதியான தாதநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குளத்திற்கான பாஸ் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
-
பழனி அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளியதை தடுக்க முயன்ற விஏஓ மீது கொலை முயற்சி நடந்த நிலையில், திமுக நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழனி, அக். 14
வி ஏ ஓ, போலீசார் மீது லாரியை ஏற்ற முயன்ற மணல் கடத்தல் கும்பல் | இருவர் மீது வழக்கு : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடி பொன்னிமலைசித்தன் கரடு பகுதியில் அனுமதியின்றி லாரிகளில் மணல் அள்ளுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி, உதவியாளர் மகுடீஸ்வரன் மற்றும் பொதுமக்களுடன் சம்பவம் இடத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு மணல் அள்ளிய லாரிகளை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், அங்கு மணல் அள்ளியவர்களிடம் ஆயக்குடி பகுதிக்கான பாஸ் எதுவும் இல்லாததும் வேறொரு பகுதியான தாதநாயக்கன்பட்டியைச் சேர்ந்த குளத்திற்கான பாஸ் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து காவல் நிலையத்திற்கு லாரிகளை கொண்டு செல்லுமாறு வி.ஏ.ஓ கருப்பசாமி கூறியுள்ளார். அதனை தொடர்ந்து லாரிகளை எடுத்துக்கொண்டு ஆயக்குடி காவல் நிலையம் செல்வதற்காக லாரிகளை முன்னால் செல்ல விட்டு பின்னால் வி.ஏ.ஓ, அவருடைய உதவியாளர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென லாரிகளை வேகமாக இயக்கியும், பின்னால் இருசக்கர வாகனங்கள் பின் தொடராத வண்ணம் ஜீப்பில் வந்தவர்கள் இருசக்கர வாகனத்தை முந்தவிடாமல் அவர்களை வலது புறமும், இடது புறமும் வாகனத்தை இயக்கி பின்னால் கதவை திறந்து விட்டு மண்ணை மேலே கொட்டியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த வி.ஏ.ஓ கருப்புசாமி ஆயக்குடி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். காவலர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காவலர்கள் மீதும் லாரியை மேலே ஏற்றி மோதுவது போல் பாசாங்கு செய்துவிட்டு இரு லாரிகளையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இதையும் படியுங்கள் : தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 36 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இதையடுத்து உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு லாரியுடன் தப்பி ஓடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி வி.ஏ.ஓ மற்றும் அவரது உதவியாளர் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் விஏஓ மற்றும் உதவியாளரை கொல்ல முயன்ற புகாரில் திமுக நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணல் கொள்ளையை தடுக்க முயன்ற விஏஓ கருப்பசாமி, உதவியாளர் மகுடீஸ்வரனை கொல்ல முயன்ற சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்த விவகாரத்தில் திமுக நிர்வாகிகள் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விஏஓ கருப்பசாமி, அவரது உதவியாளர் மகுடீஸ்வரன், இரு காவலர்கள் ஆகிய நால்வரை அவர்கள் மீது ஆற்று மணலைக் கொட்டியும், லாரியை ஏற்றியும் படுகொலை செய்ய முயன்ற நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் சக்திவேல், பாஸ்கரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், இதுவரை அவர்களை கைது செய்யாதது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.