
Seminar on ‘Translational Science’ organized by South Korea Tamil Research Organization
தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் ‘மொழிபெயர்ப்பு அறிவியல்’ கருத்தரங்கம்
சியோல், டிச. 22
தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் சார்பில் “மொழிபெயர்ப்பு கலையும், அறிவியலும்” என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் 20.12.2024 அன்று மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரம்) ஷூம் வழியாக நடைபெற்றது.
தென் கொரியா செஜோங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு தலைவருமான முனைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார்.
கருத்தரங்கில் தென்கொரியா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

தென் கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு தலைவர் பேராசிரியர் ஆரோக்கியராஜ் தனது தலைமையுரையில், “தமிழ் மற்றும் கொரிய கலாச்சாரங்களுக்கு இடையே நல்லுறவை வளர்ப்பதும், இரு நாட்டு மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வுகளை மேம்படுத்துவதுமே எங்கள் முதன்மை நோக்கம்” என்று குறிப்பிட்டார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் விஜயா ராஜேஸ்வரி, மொழிபெயர்ப்பின் நுட்பங்கள், சவால்கள் மற்றும் அதன் சமகால முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, இயந்திர மொழிபெயர்ப்பின் தற்போதைய வளர்ச்சி நிலை மற்றும் அதன் எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் விளக்கமளித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட, திருக்குறள் மற்றும் மணிமேகலை ஆகிய தமிழ் இலக்கியங்களை கொரிய மொழியில் மொழிபெயர்த்த கவிஞர் சகாய டர்சியூஸ் பீ நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சி நிறைவில் தெ.கொ.த.ஆ. அமைப்பு செயலாளர் முனைவர் ஞானராஜ் நன்றி கூறினார்.