அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
senthilbalaji admitted in stanley hospital icu
-
சென்னை புழல் சிறையில் 4 மாதங்களாக அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.
-
புழல் சிறையில் இருந்து குறைந்த தூரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை ஸ்டான்லி தான் என்பதால், அங்கு சேர்ப்பதற்காக, சிறை நிர்வாகத்துக்கு அரசு தரப்பில் இருந்தும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
சென்னை, அக். 09
அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி : ஜாமீனுக்காக தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்நிலையில், திடீரென நெஞ்சுவலி வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கார்.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் 4 மாதங்களாக அடைக்கப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொருமுறையும் நீதிமன்ற காவல் முடிந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்போதெல்லாம், அவருக்கான காவல் நீட்டிக்கப்படுகிறதே தவிர, ஜாமீன் தர மறுக்கப்பட்டு வருகிறது.
உடல் நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், செந்தில்பாலாஜிக்கு திடீரென இன்று அதிகாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டதால், அவசரம் அவசரமாக தமிழக அரசின் ஸ்டான்லி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார். ரத்த கொதிப்பும் அதிகமாகிவிட்டதாக சொல்கிறார்கள்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நலம் சீராகும் வரையில் ஸ்டான்லியில் தான் இருப்பார் என தெரிவிக்கிறது மருத்துவமனை நிர்வாகம்.
விடியற்காலையில், நெஞ்சுவலி என்றதுமே முதல் ஃபோன் முதல்வர் ஸ்டாலினுக்குத்தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விஷயத்தை கேட்டதுமே பதறித்துடித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். புழல் சிறையில் இருந்து குறைந்த தூரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை ஸ்டான்லி தான் என்பதால், அங்கு சேர்ப்பதற்காக, சிறை நிர்வாகத்துக்கு அரசு தரப்பில் இருந்தும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதேபோல, அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கும் விடியற்காலையிலேயே தகவல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், ஸ்டான்லி மருத்துவமனையில் அனைத்து வசதிகளையும் சரிபாருங்கள் என உத்தரவிட்டிருக்கிறார். செந்தில் பாலாஜி பத்திரமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அறிந்த பிறகே நிம்மதியாக சட்டமன்றம் கிளம்பி சென்றாராம் ஸ்டாலின்.
இந்த நிலையில், சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜியை தொடர்ந்து கண்காணித்து வருகிறது அமலாக்கத்துறை. அவரை கைது செய்து சிறையில் அடைத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கவில்லையாம் அமலாக்கத்துறை.
மாறாக, செந்தில்பாலாஜிக்கு என்னென்ன வசதிகள் தரப்படுகின்றன ? யார் யாரிடம் அவர் பேசுகிறார்? முதல்வருக்கு அவர் என்ன தகவல் அனுப்புகிறார். முதல்வர் தரப்பிலிருந்து அவருக்கு என்னென்ன தகவல் தரப்படுகிறது? அவரது உடல்நலம் எப்படி இருக்கிறது? என்பதையெல்லாம் ரகசியமாக அமலாக்கத்துறையினர் கண்காணித்தபடி தான் இருக்கிறார்களாம்.
இப்படிப்பட்ட சூழலில், திடீரென அவர் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆன சம்பவத்தை அமலாக்கத்துறை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லையாம். எதற்காக இந்த திடீர் அட்மிட்? என்ற சந்தேகக்கேள்வியும் எழுந்துள்ளதாம்.
இது தவிர, “ரெண்டு நாளைக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் சில மாற்றங்களை ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம் செய்தது இதற்காகத்தானா? ” என்றும் மருத்துவமனை ஊழியர்கள் தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதனிடையே, காவிரி மருத்துவமனையில் அவருக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட சிகிச்சை ரிப்போர்ட்டுகளும் ஸ்டான்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். செந்தில்பாலாஜிக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில், நெஞ்சுவலிக்காக செந்தில்பாலாஜி அட்மிட் ஆகியிருப்பது, மிகுந்த பரபரப்பை திமுகவில் ஏற்படுத்தி வருகிறது. அத்துடன், அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையமும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியால் நடக்கவே முடியவில்லை. அவரை வீல் சேரில் வைத்தே மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்து வந்தனர். செந்தில் பாலாஜிக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் ஆலோசனைப்படி தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு முழு உடல்நிலை பரிசோதனையும் செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த ஜூன் மாதம் முதல் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அவருக்கு வரும் அக். 13ஆம் தேதி வரை 7ஆவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.