-
அறிவியல் ஆசிரியை அனுசுயா வழிகாட்டுதலோடு தொழிலாளர்கள் எளிதாக சுமை தூக்குவதற்கான கருவியை உருவாக்கியுள்ளார் மாணவி தீபிகா
-
மாநில அளவிலும், தென்னிந்திய அளவிலும் நடந்த அறிவியல் கண்காட்சியில் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்தார் மாணவி தீபிகா
புதுச்சேரி, பிப் .22
புதுவை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி தீபிகா. இவரது அறிவியல் ஆசிரியை அனுசுயா வழிகாட்டுதலோடு தொழிலாளர்கள் எளிதாக சுமை தூக்குவதற்கான கருவியை உருவாக்கியுள்ளார்.
மாணவியின் இந்த படைப்புக்கு புதுவையில் நடந்த மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த தென்னிந்திய அளவிலான அறிவியல் கண்காட்சியில் தீபிகாவின் படைப்பு புதுவை மாநில அளவில் 3-வது பரிசை வென்றது.
இதனையொட்டி மாணவிக்கு பள்ளி வளாகத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் தட்சணாமூர்த்தி தலைமையில் பாராட்டு விழா நடந்தது.
இதையும் படியுங்கள் : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
இதுகுறித்து மாணவி தீபிகா கூறியதாவது:-
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணிபுரியும் இடங்களில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக, அதிக கனமான பொருட்களை தூக்கும் போது காயமடைகின்றனர்.
தசை, எலும்பு கோளாறு, கழுத்து வலி, தலை மற்றும் கண் அசைவு கோளாறு, முதுகெலும்பு பாதிப்பு போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது. மிகப்பெரிய அல்லது அதிக எடையுள்ள சுமைகளை சுமப்பதாலும் ஏற்படும் காயங்கள் மற்றும் சுளுக்கு ஆகியவை தொழிலாளர்களுக்கு பொதுவான ஆபத்துகளாகும்.
எனவே, முதுகு மற்றும் தலையில் அதிக எடையை சுமந்து செல்லும் தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் விதமாக எளிதாக சுமை தூக்கும் கருவியை வடிவமைத்தேன்.
கட்டுமானத் தளங்கள், தொழிற்சாலைகள், துறை முகங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த கருவி பயனுள்ளதாக இருக்கும். இது மடிக்கக்கூடியது மற்றும் பணியிடத்துக்கு எடுத்துச் செல்ல எளிதானது.
குறைந்த உள்கட்டமைப்புடன் எளிதாக தயாரிக்கலாம். என்னுடைய படைப்புக்கு மாநில அளவிலும், தென்னிந்திய அளவிலும் நடந்த அறிவியல் கண்காட்சியில் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு மாணவி தீபிகா தெரிவித்தார்
அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.