
“ஸ்பீக்கிங் பார் இந்தியா” | முதல் ஆடியோவை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
speaking for india | first audio released by chief minister mk stalin
-
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இழக்கின்ற நிதி கொஞ்சம் நஞ்சமல்ல. நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய 72,311 கோடி ரூபாயை நாம் இழந்திருக்கிறோம்.
-
உங்களில் ஒருவனாக, இந்தியாவிற்காகப் பேசப் போவது தான் இந்த ‘பாட் காஸ்ட் சீரிசின்’ நோக்கம். இந்தியாவிற்காக எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
சென்னை, செப். 04
“ஸ்பீக்கிங் பார் இந்தியா” | முதல் ஆடியோவை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘வஞ்சிக்கும் பா.ஜ.க.வை வீழ்த்துவோம்; இந்தியாவை மீட்டெடுப்போம்!’ என்ற தலைப்பில் “ஸ்பீக்கிங் பார் இந்தியா” முதல் ஆடியோவை இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டார்.
‘பாட் காஸ்ட் சீரிசின்’ நோக்கம்
அதில் அவர் பேசி இருப்பதாவது:- தமிழ்நாட்டின் முதலமைச்சராக-இந்திய நாடாளுமன்றத்தின் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க.வின் தலைவராக இருக்கும், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உங்களில் ஒருவனாக, இந்தியாவிற்காகப் பேசப் போவது தான் இந்த ‘பாட் காஸ்ட் சீரிசின்’ நோக்கம். இந்தியாவிற்காக எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காலம் காலமாக, இந்திய மக்கள் அனைவரும் போற்றிப் பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பையே சிதைக்க பா.ஜனதா கட்சி முயற்சி செய்கிறது.
மக்கள் நல வாக்குறுதி
2014-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பா.ஜனதா கட்சி-தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த மக்கள் நல வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. * வெளிநாட்டில் இருந்து கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தருவோம். * ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு. * உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம். * சொந்த வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். * இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும். இப்படி எல்லாம் வாயால் வடை சுட்டார்கள். 10 ஆண்டு ஆகப் போகிறது. ஆனால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ‘குஜராத் மாடல்’ என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல் இப்போது என்ன ‘மாடல்’ என்றே தெரியாமல் முடியப்போகிறது.
திராவிட மாடல்
திராவிட மாடல் என்னென்ன சாதனைகளைத் தமிழ்நாட்டில் செய்திருக்கிறார்கள் என்று நாம் புள்ளிவிவரத்தோடு அடுக்கிய பிறகு, அவர்கள் பெருமையாகப் பேசிவந்த ‘குஜராத் மாடல்’ பற்றி, இப்போது மறந்தும் கூட பேசுவதில்லை.
இது ஒரு பக்கம் என்றால்-இன்னொரு பக்கம், நன்றாக இருந்த இந்தியாவின் பொதுத்துறை கட்டமைப்பையும் சீரழித்து, சின்னாபின்னமாக்கிவிட்டார்கள். தங்களுக்கு நெருக்கமான தொழில் அதிபர்களுக்கு அதை மடைமாற்றும் செயலை மட்டுமே செய்து கொண்டு இருக்கிறார்கள்.
‘ஏர் இந்தியா’ நிறுவனம்
ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது-சிலரின் நலனாக சுருங்கி விட்டது. அரசுக்குச் சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனம், இப்போது தனியாருக்கு விற்கப்பட்டு விட்டது.

இந்தியா முழுவதும் இருக்கும் விமான நிலையங்களும், துறைமுகங்களும் தனியார் கைக்குப் போகிறது. பிரதமர் மோடி சொன்னது போல், உழவர்களின் வருமானமும் இரண்டு மடங்கு ஆகவில்லை; ஏழை பாழைகளின் வாழ்க்கைத்தரமும் உயரவில்லை.
மதவாதம்
இதை எல்லாம் மறைப்பதற்காகத்தான் மதவாதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி, அதில் குளிர் காயப் பார்க்கிறார்கள். 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. விதைத்த வன்முறை, வெறுப்பு விதையானது, 2023-ம் ஆண்டு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரைப் பற்றி எரிய வைத்திருக்கிறது.
அரியானாவில் மூட்டி விடப்பட்ட மதவெறித் தீ, இன்றைக்கு அப்பாவி மக்களின் உயிரையும் சொத்துகளையும் காவு வாங்குகிறது. இதற்கு இப்போது முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது.
முன்னணிப் படையாக தி.மு.க.
இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு-கூட்டாட்சித் தத்துவத்திற்கு-மக்களாட்சி மாண்புக்கு எப்போதெல்லாம் ஆபத்து வந்திருக்கிறதோ, அப்போதெல்லாம் முன்னணிப் படையாக தி.மு.க. நின்றிருக்கிறது. “தமிழ்நாட்டில் கால் பதித்து நின்று இந்தியாவிற்காகப் பேசும் கட்சியாக நமது இயக்கம் இயங்க வேண்டும்” என்று சொன்னதோடு மட்டுமில்லாமல், ஆட்சி மாற்றங்களையே உருவாக்கிக் காட்டி இருக்கிறார் தமிழினத் தலைவர் கலைஞர்.
மீண்டும் ஒரு வரலாற்றுக் கடமை
பிரதமர்களை- குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய இயக்கம் தி.மு.க. இப்போது மீண்டும் ஒரு வரலாற்றுக் கடமை நம்மை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. 2024 தேர்தல் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட-யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்று தீர்மானிக்க வேண்டிய தேர்தல். 9 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில், மாநிலங்களை அழிக்கின்ற படுபாதகமான பல மோசடிகள் செய்யப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் நிதி உரிமையை முழுவதுமாக பறித்துவிட்டது ஜி.எஸ்.டி. இதனால், தமிழ்நாட்டிற்கு நிதி சுயாட்சி உரிமை பறிபோனதுதான் மிச்சம்.
ஜி.எஸ்.டி இழப்பீட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மாநிலங்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு அதை ஏற்கவில்லை. ஒன்றிய அரசுக்கு வரியாக, தமிழ்நாடு ஏராளமான நிதியை ஆண்டுதோறும் தருகிறது. அதே நேரத்தில், தமிழ்நாடு ஒன்றிய அரசிற்கு வரி வருவாயாக செலுத்துகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் ஈடாக, 29 பைசா மட்டுமே திரும்பக் கிடைக்கிறது.
இதையும் படியுங்கள் :சேர்வலாறு அணை | தொடர்மழையால் ஒரே நாளில் 11 அடி நீர் மட்டம் உயர்வு
2014 முதல் கடந்த ஆண்டு வரை நம் மாநிலம் ஒன்றிய அரசுக்கு கொடுத்த வரி 5 லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், வரிப் பகிர்வாக, நமக்குத் திரும்ப கிடைத்தது என்னவோ, வெறும் 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய்தான். பெற்றதை முழுவதுமாகத் தர முடியாது என்று சொன்னால் பா.ஜ.க. ஆளுகிற மாநிலத்திற்கு மட்டும் எப்படி கொடுக்க முடிகிறது? பா.ஜ.க. ஆளும் ஒரு மாநிலம் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய்தான் வரியாகக் கொடுத்திருக்கிறது. ஆனால் வரிப்பகிர்வாக, 9 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் பெற்றிருக்கிறது. இதைத்தான் ஓர வஞ்சனை என்று சொல்கிறோம்.
எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆட்சி
இவ்வாறு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் ஆட்சியாக மத்திய பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது. ஒன்றிய நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழ்நாடு தொடர்ந்து பெரும் நிதி இழப்பை சந்தித்து வருகிறது. 12-வது நிதிக்குழுவில் 5.305 சதவீதமாக இருந்த நிதி ஒதுக்கிடு, 15-வது நிதிக்குழுவில் 4.079 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இழக்கின்ற நிதி கொஞ்சம் நஞ்சமல்ல. நமக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய 72,311 கோடி ரூபாயை நாம் இழந்திருக்கிறோம். பல திட்டங்களுக்கான பெரும் பங்கு மாநில அரசால்தான் வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கான பெயர் மட்டும் மத்திய அரசுக்கு வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
முத்திரைத் திட்டங்கள்
தமிழ்நாட்டிற்கு முத்திரைத் திட்டங்கள் என்று ஒன்று கூட இந்த 9 வருடங்களில் தரவில்லை. மாநிலங்களைப் பழிவாங்குகிற அரசாக இப்போதைய மத்திய பா.ஜ.க. அரசு இருக்கிறது. மக்களுக்கு நேரடியாக நன்மை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கிற மாநில அரசுகளை சிதைப்பதையே நோக்கமாக வைத்திருக்கிறார்கள். இது மூலமாக ஒட்டுமொத்த இந்தியாவையும் சிதைக்கப் பார்க்கிறார்கள்.
இந்தியா கூட்டணி
சமூக நீதி, மதச்சார்பற்ற அரசியல், சோசலிசம், சமத்துவம், சமூக நல்லிணக்கம், மாநில சுயாட்சி, கூட்டாட்சி, வேற்றுமையில் ஒற்றுமை-இவை உயிர்வாழும் இந்தியாதான் உண்மையான இந்தியா! இணையற்ற இந்தியா! அப்படிப்பட்ட இந்தியாவை மீட்டெடுக்கத்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவைக் காப்பாற்றப் போவது இந்த இந்தியா கூட்டணிதான்.
பா.ஜ.க.வின் வகுப்புவாத-வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூரும் அரியானாவும் பலியானதைப்போல மொத்த இந்தியாவும் பலியாகி விடாமல் தடுக்க வேண்டும் என்றால், இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். இதற்கான ஆரம்பகட்ட ஆலோசனைக் கூட்டங்கள் பாட்னாவிலும், பெங்களூருவிலும், மும்பையிலும் நடந்துள்ளன.
இந்தியாவுக்காகப் பேசுவோம்!
பன்முகத்தன்மை கொண்ட பண்பட்ட இந்தியாவைச் செதுக்குவோம்! இந்தியாவைக் காப்போம். அதற்காக முதலில் இந்தியாவுக்காகப் பேசுவோம்! இனி இது மு.க.ஸ்டாலின் குரலாக மட்டுமல்ல, இந்தியாவின் குரலாக அமையும். எனது குரலை இந்தியாவின் குரலாக எல்லோரிடத்திலும் எடுத்துச் செல்லுங்கள். வெல்க இந்தியா. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.