
தமிழகத்தின் திராவிட மாடலே இனி இந்தியாவின் ஆட்சி நிர்வாக ஃபார்முலா – முதல் அமைச்சர் மு. க. ஸ்டாலின்
Tamil Nadu’s Dravidian model is now India’s governing formula – cm mk stalin criticizes bjp
-
இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள்
-
பட்டியலினத்தை சேர்ந்த குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்படும்
சென்னை, மே. 04
“இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாக இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று பாஜகவை முதல் அமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மக்களுக்குமான திட்டங்கள்
திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள கடிதத்தில், “மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, காலைச் சிற்றுண்டித் திட்டம், நம்மைக் காக்கும் 48, புதிய முதலீடுகள், அதிகத் தொழிலகங்கள், நிறைய வேலைவாய்ப்புகள் என அனைத்து மக்களுக்குமான – அனைத்துப் பகுதிகளுக்குமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக சொற்பொழிவாளர்களின் கடமை
எதிர்வரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாள் முதல் குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இவை அனைத்தையும் மக்களின் இதயத்தில் பதிந்திடும் வகையில் எடுத்துரைக்க வேண்டியது திமுக சொற்பொழிவாளர்களின் கடமை” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “திராவிட மாடல் அரசின் சமூக நலத் திட்டங்களை, மக்களை மேம்படுத்தும் திட்டங்களை, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் பயணிக்கச் செய்யும் திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்றும், இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாகவும் இழிவாகப் பேசியவர்கள் இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்து அக்கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : தி கேரளா ஸ்டோரி: திரையிடப்பட்டால் பிரச்சினை ஏற்படுமா ? ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு
திராவிட மாடலே ஆட்சி நிர்வாக ஃபார்முலா
அத்துடன், “தமிழகத்தின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இருளை விரட்டிய இரண்டாண்டுகால விடியல் ஆட்சியின் வெற்றி இது. ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும். அடுத்தடுத்த தேர்தல் களங்களிலும் வெற்றி நீடிக்கும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடகாவில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான பாஜக தொண்டர்களுடன் காணொலி வாயிலாக உரையாடினார். அப்போது அவர், “நமது நாட்டில் சில அரசியல் கட்சிகள் கொள்ளை அடிக்க வேண்டும் என்பதற்காகவே அதிகாரத்துக்கு வர துடிக்கின்றன. அதற்காக எல்லா வகையான குறுக்கு வழிகளையும் பயன்படுத்துகிறார்கள்.
இலவசமாக பொருட்கள்
அவர்களுக்கு நாட்டின் எதிர்காலம் குறித்து கவலை இல்லை. இலவச திட்டங்களையும், இலவசப் பொருட்களையும் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் தேர்தலுக்கு முன்பாகவே காலாவதி ஆகிவிடுகின்றன. இலவசமாக பொருட்கள் வழங்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும். நாட்டு மக்கள் இதற்கு ஒரு முடிவை கட்ட வேண்டும்” என்று பேசியிருந்தார்.
பாஜக தேர்தல் வாக்குறுதிகள்
இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் பாஜக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகள்: பாஜக ஆட்சிக்கு வந்தால் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்ப அட்டைதாரர்களுக்கு உகாதி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகிய பண்டிகைகளின்போது, அதாவது ஆண்டுக்கு 3 இலவச காஸ் சிலிண்டர் வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தினசரி அரை லிட்டர் நந்தினி பால் வழங்கப்படும். மாதந்தோறும் 5 கிலோ அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.
10 லட்சம் வீடற்ற மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். 10 லட்சம் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும். 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு நகராட்சியிலும் மலிவு விலை ‘அடல் உணவகம்’ திறக்கப்படும்.
பட்டியலினத்தை சேர்ந்த குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.10 ஆயிரம் வரவு வைக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் இலவச சுகாதார மையங்கள் திறக்கப்படும். உயர்மட்ட குழுவின் பரிந்துரையின்படி கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்படும்.ரூ.1,000 கோடி செலவில் புராதன கோயில்கள் புதுப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.