பாஜக கூட்டணியில் இடம் பெறாத மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தைத் தர மறுத்தது இந்திய தேர்தல் ஆணையம்
The Election Commission of India refused to give the symbols requested by the MDMK, VCK and Nam Tamilar parties, which are not part of the BJP alliance
-
பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர்ந்த உடனேயே அக்கட்சிக்கு மாம்பழ சின்னம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னமும் ஜிகே வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது.
-
பாஜக கூட்டணியில் சேராத ஒரே காரணத்துக்காகவே ஒவ்வொரு தேர்தலிலும் பயன்படுத்திய சின்னங்களை தங்களுக்கு ஒதுக்க மறுப்பது என்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்கின்றனர் மதிமுக, நாம் தமிழர் கட்சித் தலைவர்களான துரை வைகோ, சீமான்.
சென்னை, மார்ச். 27
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, தமாகா, அமமுக கட்சிகளுக்கு மாம்பழம், சைக்கிள், குக்கர் என பழைய சின்னங்கள் கொடுக்கப்படுகின்றன; ஆனால் எங்களுக்கு மட்டும் அப்படி தராமல் போராட வைப்பது எப்படி நியாயமாகும் என்பதுதான் நாம் தமிழர் கட்சி, விசிக மற்றும் மதிமுகவினரின் கேள்வி.
தேர்தல்களில் போட்டியிட்டு கணிசமான வாக்குகள், இடங்களைப் பெற்றால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக, சின்னங்களை இழக்காத கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் மாநில அந்தஸ்து, தேசிய அந்தஸ்துகளை இழக்கும் கட்சிகள் பட்டியலை வெளியிட்டது.
இதில் புதுச்சேரியில் பாமக மாநில கட்சி அந்தஸ்தை பறிகொடுத்தது. இதனால் பாமக தமது மாம்பழ சின்னத்தையும் இழந்து இனி தேர்தல்களில் மாம்பழம் என்ற பொதுச் சின்னத்தில் போட்டியிடாத சூழ்நிலை உருவானது.
பாமகவை விட மிக மிக சொற்பமான வாக்குகளைப் பெற்று டெபாசிட்டுகளை இழந்தவைதான் டிடிவி தினகரனின் அமமுக, ஜிகே வாசனின் தமாகா. இதனால் இந்த கட்சிகளுக்கும் குக்கர் மற்றும் சைக்கிள் சின்னங்கள் கிடைக்காத நிலைமைதான் இருந்தது. தமிழ்நாட்டில் மதிமுக , விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கும் பொதுச் சின்னம் கிடைக்காது என்பதைத்தான் அக்கட்சிகளின் வாக்கு சதவீதம் வெளிப்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் உரிய காலத்தில் விண்ணப்பித்து தங்களுக்கான சின்னங்களைப் பெறுவதில் முனைப்பு காட்டி வந்தன.
பாமகவும் மாம்பழம் சின்னத்துக்கு விண்ணப்பித்திருந்தது. அமமுக குக்கர் சின்னத்துக்கும் ஜிகே வாசன் கட்சி சைக்கிள் சின்னத்துக்கும் மதிமுக பம்பரம் சின்னத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்துக்கும் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்துக்கும் விண்ணப்பித்தன.
ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர்ந்த உடனேயே அக்கட்சிக்கு மாம்பழ சின்னம் உறுதி செய்யப்பட்டது. அதேபோல தினகரனின் அமமுகவுக்கு குக்கர் சின்னமும் ஜிகே வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னமும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல் : வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவு ; பூத் சிலிப் ஏப். 1 விநியோகம்
பாஜக கூட்டணியில் இடம் பெறாத மதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்துவிட்டது இந்திய தேர்தல் ஆணையம். இதனால் இந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் நீதிமன்றங்களை நாடியிருக்கின்றன.
மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் தரவே முடியாது என கைவிரித்துவிட்டது தேர்தல் ஆணையம். நாம் தமிழர் கட்சி எவ்வளவோ போராடியும் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத நிலையில் மைக் சின்னத்தைப் பெற்றுள்ளது. பானை சின்னம் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தீர்ப்புக்கு காத்திருக்கிறது விசிக.
பாஜக கூட்டணியில் சேராத ஒரே காரணத்துக்காகவே ஒவ்வொரு தேர்தலிலும் பயன்படுத்திய சின்னங்களை தங்களுக்கு ஒதுக்க மறுப்பது என்பது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்கின்றனர் மதிமுக, நாம் தமிழர் கட்சித் தலைவர்களான துரை வைகோ, சீமான். இதே கருத்தைத்தான் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பியும் முன்வைக்கிறார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்