டங்ஸ்டன் விவகாரம் : மக்களவையில் விவாதிக்கக் திமுக, காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ்
Tungsten issue: DMK, Congress submit adjournment notice to discuss in Lok Sabha
-
டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய கோரி, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
-
டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார்.
புதுடெல்லி,
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக, காங்கிரஸ் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
முன்னதாக நேற்று, மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய கோரி, சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனி தீர்மானம் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறியது.
நேற்று இந்தத் தனி தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “நான் முதல்வராக இருக்கும் வரை நிச்சயமாக மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டுவர முடியாது. அனுமதிக்க மாட்டோம். எதிர்க்கட்சிகள் பார்வையில் அலட்சியமாகவும், நாங்கள் தவறிவிட்டோம் என்றுகூட இருக்கலாம்.
ஆனால், எங்களுடைய பார்வையில் இந்த பிரச்சினையை சுட்டிக்கட்டி கடிதங்கள் எழுதியிருக்கிறோம். எந்த காரணத்தை கொண்டும் இந்த திட்டம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. அதனை தடுத்து நிறுத்துவோம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் முதல்வர் பொறுப்பில் நான் இருக்க மாட்டேன்.” எனக் கூறியிருந்தார்.
மேலும் முதல்வர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “மதுரை மக்களுக்கு அ.தி.மு.க. செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி. பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது.
மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அதிமுக செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” எனத் தம்பிதுரை மழுப்பி இருக்கிறார்.
அதிமுக ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது.
அந்தச் சட்ட மசோதாவைத் திமுக எதிர்த்தது; அதிமுக ஆதரித்தது. டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை ஒன்றிய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார்.
அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், ஒன்றிய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அதிமுக ஆதரித்தது. இதன் அடிப்படையில்தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை ஒன்றிய அரசு மேற்கொண்டது.
இதையும் படியுங்கள் : ‘தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்தநாள் இனி தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும் – தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அதிமுகவின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை? மாநில உரிமையைப் பறித்து ஒன்றிய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அதிமுக ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற?
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமி அவர்களின் புளுகும் – புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழியும், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் ஒத்திவைப்பு தீர்மானம் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்