
டங்ஸ்டன் திட்ட ஏல ரத்தும், மத்திய பாஜக அரசிடம் மக்களின் எதிர்பார்ப்பும் – திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிக்கை
‘Tungsten project auction cancellation, people’s expectations from central BJP government’- anti-project people’s federation report released
-
மத்திய பாஜக அரசும் பல்லுயிர் தளம் அமைந்துள்ள சுமார் 500 ஏக்கரை தவிர்த்து திட்டத்தை மறு ஆய்வு செய்வதாக கூறி ஒரு அறிவிப்பை வெளியீடு
-
திட்ட ரத்து செய்யப்படுவதை எழுத்துப்பூர்வமாக அரசாணை வடிவில் எங்களுக்கு அளித்தால் மட்டுமே ,கடந்த 2 மாத காலமாக அன்றாட வேலைகளை துறந்து, உணவு உறக்கமின்றி போராடிய லட்கணக்கான மக்களின் போராட்டத்துக்கான உண்மையான வெற்றி
மதுரை, ஜன. 22
டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதைத் தவிர வேறு எந்த சமரசத்தையும் ஏற்க மாட்டோம். வெறுமனே வாயால் தரும் வாக்குறுதிகளை நம்புவதற்கு நாங்கள் தயாராக இல்லை. திட்டம் ரத்து செய்யப்படுவதை எழுத்துபூர்வமாக அரசாணை வடிவில் எங்களுக்கு அளிக்க வேண்டும்” என்று, ‘டங்ஸ்டன் திட்ட ஏல ரத்தும், மத்திய பாஜக அரசிடம் மக்களின் எதிர்பார்ப்பும்’ என்ற தலைப்பில் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் கடந்த நவம்பர் 7-ம் நாள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு டங்ஸ்டன் கனிமத்தை எடுப்பதற்கான அனுமதியை, தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாதுகாப்பு தளம் அமையப்பெற்ற அரிட்டாபட்டி-மீனாட்சிபுரம் பகுதியை உள்ளடக்கி 5000 ஏக்கர் நிலத்தில் அனுமதி வழங்கியது.
இதை அறிந்து மேலூர் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். பொதுமக்களின் போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட மாநில திமுக அரசு சட்டமன்றத்தில் அனைத்து கட்சிகளின் ஒப்புதல் உடன் ஒரு சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தது. மத்திய பாஜக அரசும் பல்லுயிர் தளம் அமைந்துள்ள சுமார் 500 ஏக்கரை தவிர்த்து திட்டத்தை மறு ஆய்வு செய்வதாக கூறி ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
இந்த அறிவிப்பில் இருந்த சூழ்ச்சியை மக்கள் உணர்ந்து கொண்டனர். இந்த திட்டத்தை முழுமையாக கைவிடாமல் மறு ஆய்வு அல்லது மறு வரையறை என்பது ஏமாற்று வேலை அதை தாங்கள் ஏற்க இயலாது என்று உறுதிபடக் கூறினர். கடந்த ஜனவரி 7-ம் தேதி முல்லைப்பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் விடுத்த அழைப்பின் பேரில், மேலூர் நரசிங்கம்பட்டியில் இருந்து மதுரை தமுக்கம் தலைமை தபால் அஞ்சலகம் வரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தன்னெழுச்சியாக திரண்டு ஒரு கட்டுக்கோப்பான வரலாற்று சிறப்புமிக்க நடைப்பயண போராட்டத்தை நடத்தி காட்டினர்.
அதன் பிறகு டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்த டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கல் உள்ளிட்ட பல்வேறு வடிவ போராட்டங்களை மேலூர் பகுதி மக்கள் கடைப்பிடித்து தங்கள் எதிர்ப்புக்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வந்தனர். மத்திய பாஜக அரசினை நோக்கி டங்ஸ்டன் திட்டத்தை கைவிடக்கோரி மக்கள் போராட்டம் மேலும் மேலும் தீவிரமடைந்த சூழலில் அ. வல்லாளப்பட்டியில் மக்களை சந்தித்த பாஜக மாநில தலைவரான அண்ணாமலை விரைவில் போராடும் மக்களை நேரில் அழைத்து மத்திய அரசு திட்டம் தொடர்பான நல்ல முடிவை அறிவிக்க இருக்கிறது என்று கூறி சென்றார்.
இதை அடுத்து தற்போது தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சரை சந்திப்பதற்காக 8 பேர் அடங்கிய ஒரு குழுவை பாஜக-வினர் அழைத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்தப் பகுதி மக்களிடம் சந்தித்து பேசிய பொழுது, இந்த டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதைத் தவிர வேறு எந்த சமரசத்தையும் தாங்கள் ஏற்க மாட்டோம் எனவும், திட்ட ரத்து செய்யப்படுவதை எழுத்துப்பூர்வமாக அரசாணை வடிவில் எங்களுக்கு அளித்தால் மட்டுமே ,கடந்த 2 மாத காலமாக அன்றாட வேலைகளை துறந்து, உணவு உறக்கமின்றி போராடிய லட்கணக்கான மக்களின் போராட்டத்துக்கான உண்மையான வெற்றியாக இருக்கும்.
இந்த உணர்வுளை புரிந்து மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து வெறுமனே வாயால் தரும் வாக்குறுதிகளை நம்புவதற்கு தாங்கள் தயாராக இல்லை. எனவே மத்திய அரசு இந்த டங்ஸ்டன் சுரங்கம் என்னும் நாசகார திட்டத்தை முழுமையாக ரத்து செய்து அதற்கான அரசாணையை வெளியிடுவதோடு, அதை அரசிதழிலும் வெளியிடுவதற்கு ஆவணம் செய்ய வேண்டும். அப்படி செய்வதை மட்டுமே ஏற்போம் மற்ற வாய்மொழி வாக்குறுதிகளை நம்பமாட்டோம் என்று கூறினார். எனவே டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மக்களின் இந்த உணர்வுகளுடம் முழுமையாக உடன்பாடு கொள்கிறது.
மேலும், இந்தத் திட்டத்தை ஏற்கெனவே ஏலம் விடப்பட்ட 5,000 ஏக்கர் தவிர்த்து டங்ஸ்டன் ஆய்வுகள் நடந்துள்ள மேலவளவு, கச்சிராயன்பட்டி, கம்பூர், கருங்காலக்குடி ,வஞ்சிநகரம் உள்ளடங்கிய மற்ற பகுதிகளில் நடைமுறைப்படுத்திட முயற்சி செய்கிறதோ என்ற அச்சமும் டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்புக்கு உள்ளது.
இதையும் படியுங்கள் : அமெரிக்க டாலர் ஏறுமுகம் ; இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
எனவே, இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்வதை தவிர்த்து வேறு எந்த வடிவிலும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய பாஜக அரசு ஈடுபடுமானால் மக்கள் போராட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் இணைந்து அனைத்து விதமான போராட்டங்களிலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பைச் செய்யும்” என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக, மத்திய சுரங்கத் துறை அமைச்சரை சந்திக்கும் வகையில் அரிட்டாபட்டி விவசாயிகளை பாஜக தலைவர்கள் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “டங்ஸ்டன் விவகாரத்தில் புதன்கிழமை (இன்று) மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகும். தொடக்கத்தில் இருந்தே இதற்கு தீர்வு வழங்கவே மத்திய அரசு முயற்சித்து வருகிறது” என்றது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்