
இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு மத்திய அமைச்சரவை 2 நிமிடம் மவுன அஞ்சலி
Union cabinet condoles demise of former Prime minister Manmohan singh
-
இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம விபூஷன் (1987), இந்திய அறிவியல் காங்கிரசின் ஜவஹர்லால் நேரு பிறந்த நூற்றாண்டு விருது (1995), ஆண்டின் நிதியமைச்சருக்கான யூரோ மணி விருது (1993), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு (1956) ஆகியவை அவர் பெற்ற விருதுகளில் மிக முக்கியமானவை
-
“ஜனவரி 1, 2025 வரை ஏழு நாட்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கப்படும். இந்தத் துக்க காலத்தில் நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
புதுடெல்லி, டிச. 27
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நினைவாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், மன்மோகன் சிங்குக்கு மத்திய அமைச்சரவை 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தியது.
மத்திய அமைச்சரவையின் தீர்மானத்தில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவுக்கு அமைச்சரவை ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் மேற்கு பஞ்சாபின் கா என்ற கிராமத்தில் செப்டம்பர் 26, 1932 அன்று பிறந்த மன்மோகன் சிங், அறிவார்ந்த முறையில் தொடர்ந்து கல்வி பயின்றார். 1954-ம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டமும், 1957 ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதல் வகுப்பு ஹானர்ஸ் பட்டமும் பெற்றார். 1962-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இவருக்கு டி.ஃபில் பட்டம் வழங்கியது.
சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய மன்மோகன் சிங், அதே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியரானார். 1969 ஆண்டு, டெல்லி பல்கலைக்கழகத்தின் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சர்வதேச வர்த்தக பேராசிரியரானார். 1971-ல் அப்போதைய வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தில் மன்மோகன் சிங் பொருளாதார ஆலோசகரானார்.
நிதி அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் (1972-76), பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் (நவம்பர் 1976 முதல் ஏப்ரல் 1980 வரை), திட்டக் குழுவின் உறுப்பினர் செயலாளராகவும் (ஏப்ரல் 1980 முதல் செப்டம்பர் 1982 வரை), இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் (செப்டம்பர் 1982 முதல் ஜனவரி 1985 வரை) பணியாற்றினார்.
இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம விபூஷன் (1987), இந்திய அறிவியல் காங்கிரசின் ஜவஹர்லால் நேரு பிறந்த நூற்றாண்டு விருது (1995), ஆண்டின் நிதியமைச்சருக்கான யூரோ மணி விருது (1993), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு (1956) ஆகியவை அவர் பெற்ற விருதுகளில் மிக முக்கியமானவை ஆகும்.
இதையும் படியுங்கள்: தென்கொரியா தமிழ் ஆராய்ச்சி அமைப்பு சார்பில் ‘மொழிபெயர்ப்பு அறிவியல்’ கருத்தரங்கம்
மன்மோகன் சிங் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் நிதியமைச்சராகப் பணியாற்றினார். பொருளாதார சீர்திருத்தங்களுக்கான விரிவான கொள்கையை உருவாக்குவதில் அவரது பங்கு நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. டாக்டர் மன்மோகன் சிங், 22 மே 2004 அன்று இந்தியப் பிரதமரானார். மே 2009 வரை பிரதமராக பணியாற்றினார். மே 2009 முதல் 2014 வரை இரண்டாவது முறையாகவும் பிரதமரானார்.
மன்மோகன் சிங் நமது தேசிய வாழ்வில் தனது முத்திரையைப் பதித்துள்ளார். அவரது மறைவால், தேசம் ஒரு சிறந்த அரசியல்வாதி, புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் மற்றும் ஒரு புகழ்பெற்ற தலைவரை இழந்துள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அரசு மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் சார்பில் அமைச்சரவை தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, “ஜனவரி 1, 2025 வரை ஏழு நாட்களுக்கு அரசு துக்கம் அனுசரிக்கப்படும். இந்தத் துக்க காலத்தில் நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். 01.01.2025 வரை ஏழு நாட்களுக்கு வெளிநாடுகளில் உள்ள அனைத்து இந்திய தூதரகங்கள் மற்றும் ஹைகமிஷன்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும். அரசு மரியாதை நாளன்று அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அரை நாள் விடுமுறை அறிவிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்