Home செய்திகள் வடியாத வெள்ளத்தால் தீவுகளான தென் மாவட்ட கிராமங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் அவதி

வடியாத வெள்ளத்தால் தீவுகளான தென் மாவட்ட கிராமங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் அவதி

0
வடியாத வெள்ளத்தால் தீவுகளான தென் மாவட்ட கிராமங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் அவதி

வடியாத வெள்ளத்தால் தீவுகளான தென் மாவட்ட கிராமங்கள் | அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் அவதி

Villages of southern district, which are islands due to unabated flood, are in dire need of essential commodities

திருநெல்வேலி, டிச. 20

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏராளமான கிராமங்கள் 3-வது நாளாக நேற்றும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மின்சாரம், போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் ராணுவம், பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

குமரிக் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி இரவு அதிகனமழை பெய்யத் தொடங்கியது. 17-ம்தேதி முழுவதும் பெய்த அதிகனமழை 18-ம் தேதி காலை 8 மணிவரை நீடித்தது. இதனால் 4 மாவட்டங்களும் மழை நீரால் சூழப்பட்டு, கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணை மற்றும் ராமநதி, குண்டாறு, கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு அதிக நீர்வரத்து இருந்தது.

எனினும், அபாயத்தை தவிர்க்கும் வகையில், கூடுதலாக வந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு, உச்சநீர்மட்டத்தில் இருந்து 5 அடிக்கு குறைவாகவே நீர்மட்டம் நிலைநிறுத்தப்பட்டது.

தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், கரையோரப் பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. நான்கு மாவட்டங்களிலும் உள்ள குளங்கள், கண்மாய்கள் 100 சதவீதம் நிரம்பி, மறுகால் பாய்கின்றன.

இதன் காரணமாக கிராமங்கள், வயல்கள், தோப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. நேற்று தென் மாவட்டங்களில் முழுமையாக மழை ஓய்ந்து, வெயில் அடித்தது. எனினும், ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதையும் படியுங்கள்: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பொட்டல், கொழுமடை உள்ளிட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முழுமையாக தண்ணீரின் பிடியில் சிக்கி உள்ளது. நேற்று மாலை வரை திருநெல்வேலி மாவட்டத்தில் 7 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேரும் வெள்ளம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் உள்ள ஸ்ரீ வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், ஆழ்வார்தோப்பு, ஆதிநாதபுரம், புதுக்குடி, கேம்பலாபாத், ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.

மேலும், சாத்தான்குளம், உடன்குடி, திருச்செந்தூர், ஏரல், சாயர்புரம், காயல்பட்டினம், ஆறுமுகநேரி பகுதிகளும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு, மக்கள் கிராமங்களை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது.

இதன் காரணமாக தாமிரபரணி கரையோரம் உள்ள பல கிராமங்கள் தனித்தனி தீவுகளாக மாறின. இந்தக் கிராமங்களில் வசிக்கும் மக்கள் உணவு, குடிநீர், பால் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

இப்பகுதி மக்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். மேலும், அவர்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களும் விநியோகிக்கப்பட்டன.

ஸ்ரீவைகுண்டத்தில் பிரசவ வலியால் துடித்த ஒரு பெண் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் செல்ல முடியாத நிலை நீடிப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

திருநெல்வேலி உள்ளிட்ட 4மாவட்டங்களிலும் குளங்கள்நிரம்பி, உபரிநீர் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் மக்கள் பாதிப்படைந்தனர். ஏறத்தாழ 85 ஆயிரம் ஹெக்டேர் நெல் பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி, நாற்றுகள் அழுகிவிட்டன.

குளங்கள் நிரம்பியுள்ள நிலையில், விவசாயிகள் மறுநடவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல, வாழை, தென்னை, மரச்சீனி, ரப்பர் உள்ளிட்ட பயிர்களும், கோவில்பட்டி வட்டாரத்தில் மக்காச்சோளம், பாசிப்பயறு, மிளகாய் உள்ளிட்ட பயிர்களும் வீணாகிவிட்டன.

காற்றழுத்த சுழற்சி இன்னும் குமரிக்கடலில் இருந்து விலகவில்லை என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், மன்னார் வளைகுடா மற்றும் அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 3,000 விசைப்படகுகள், 40,000 நாட்டுப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித்துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.