
பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏன் ? இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறது இந்திய ராணுவம்
Why attack Pakistan? The Indian Army will meet the press at 10 am today
டெல்லி, மே. 07
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளது. இன்று அதிகாலை பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விளக்கம் அளிக்க போகிறது.
காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்ற நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வந்தது. இன்று மாலை இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் போர் ஒத்திகை நடத்தப்போவதாக இந்தியா அறிவித்திருந்தது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், இன்று அதிகாலை 1:44 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மற்றும் அவர்கள் செயல்படும் இடங்களை குறிவைதது இந்தியாவின் முப்படைகள் துல்லிய தாக்குதல்களை நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’- என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் தாக்கியது. பாகிஸ்தான் இராணுவ தளங்கள் எதையும் இந்தியா குறிவைக்கவில்லை.
பவல்பூர், முரிட்கே, சியால்கோட், சகாம்ரு, குல்பூர், பிம்பர், கோட்லி மற்றும் முசாபராபாத் ஆகிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும், சியால்கோட், பஹவல்பூர், சக் அம்ரு மற்றும் முரிட்கே உள்ளிட்ட பாகிஸ்தான் நகரங்களிலும் உள்ள தீவிரவாத முகாம்களில் மட்டும் துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தி இருந்தன. இந்த தாக்குதலில் பயங்கராவதிகள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்த பாதுகாப்பு துறை அமைச்சகம், “சில மணி நேரங்களுக்கு முன்பு இந்திய இராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் மிஷனை முன்னெடுத்தது. அதன்வழி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் மீது தீவிரவாதத் தாக்குதலை தொடுக்கத் திட்டம் தீட்டிய தீவிரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தி உள்ளோம். மொத்தமாக 9 இடங்களைக் குறிவைத்து தாக்கி உள்ளோம்.
எங்களின் (இந்திய) இராணுவம் தெளிவாகத் திட்டமிட்டு குறிவைத்து இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்தின் முகாம்கள் எதையும் நாங்கள் தாக்கவில்லை. மேற்கொண்டு பதற்றத்தை அதிகரிக்காத வகையில்தான் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பஹல்காமில் தீவிரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி 25 இந்தியர்களையும் ஒரு நேபாள நாட்டவரையும் சுட்டுக்கொன்றதற்கான எதிர்வினைதான் இந்த சிந்தூர் தாக்குதல். பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆப்ரேஷன் சிந்தூர் பற்றி இன்றைய நாளில் பின்னர் விரிவாக கூறுகிறோம்.” இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு இந்திய ராணுவம் சிந்தூர் தாக்குதல் குறித்து நாட்டு மக்களுக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது.