
வங்கி அபராதமாக வசூலிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை
women entitlement amount collected as penalty by bank
-
வங்கி கணக்கில் அரசு ரூ.1000 செலுத்தியதில் பலரது கணக்கில் அவற்றை வங்கிகள் பிடித்தம்
-
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதை எடுக்கும்போது சில கஷ்டங்களும், பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
சென்னை, செப்.19
வங்கி அபராதமாக வசூலிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை : தமிழக அரசு சார்பில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் பெண்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்கில் அரசு ரூ.1000
வங்கி கணக்கில் அரசு ரூ.1000 செலுத்தியதில் பலரது கணக்கில் அவற்றை வங்கிகள் பிடித்தம் செய்து கொண்டன. கணக்கில் இதுவரையில் பணம் இல்லாமல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளாமல் இருந்ததால் அபராதமாக பிடிக்கப்பட்டது.
இது பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கள் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ.1000-ம் குறைந்தபட்சம் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பலரது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டதும் தானாகவே அபராத தொகையாக வசூலிக்கப்பட்டு விட்டன. இதனால் இத்திட்டத்தின் பயன் குடும்ப தலைவிகளுக்கு முழுமையாக கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதற்காக அரசு வங்கி தலைமை அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன தலைவர் சி.எச்.வெங்கடாசலம் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்கள் வங்கி கணக்கில் பணம் செலுத்தியதை எடுக்கும்போது சில கஷ்டங்களும், பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்கு
வங்கியில் 2 வகையான சேமிப்பு கணக்குகள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. ‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்கு என்று சொல்லக் கூடியதாகும். அதாவது கணக்கில் சிறு தொகை கூட இருப்பு இல்லாமல் முழுமையாக எடுக்கவும், டெபாசிட் செய்யக்கூடிய வசதியாகும். இவ்வகை வங்கி கணக்கில் இருந்து முழுமையான தொகை எடுத்தாலும கூட அபராதம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. மற்றொரு வகை சாதாரண சேமிப்பு கணக்காகும். இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ.500 அல்லது ரூ.1000 இருப்பு இருக்க வேண்டும்.
குறைந்தபட்ச இருப்பை விட பணம் குறையும்போது அபராதம் வசூலிக்கப்படும் நடைமுறை உள்ளது. வங்கி விதிகளின்படி ஜீரோ பேலன்ஸ் கணக்கை சாதாரண சேமிப்பு கணக்கிற்கு மாற்றலாம். ஆனால் சாதாரண சேமிப்பு கணக்கை ஜீரோ பேலன்ஸ் கணக்கிற்கு மாற்றம் செய்ய இயலாது. இத்திட்டத்தில் பெரும்பாலான பயனாளிகள் கொடுத்துள்ள வங்கி கணக்கு சாதாரண சேமிப்பு கணக்காகும்.
சாதாரண சேமிப்பு கணக்கு
‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்கு வைத்திருக்கவில்லை. அதனால் குறைந்தபட்ச இருப்பு இல்லாத காரணத்திற்காக குறிப்பிட்ட சிறு தொகை அபராதமாக வசூலிக்கப்படுகிறது. எனவே வங்கிகள் குறைந்த இருப்பிற்காக வசூலிக்கப்படும் அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது சாதாரண சேமிப்பு கணக்கு வைத்துள்ள பெண்களின் கணக்கை ‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்காக மாற்ற அரசு வங்கிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன் அடையும் பெண்கள் எவ்வித கஷ்டமும் இல்லாமல் அபராத கட்டணமும் இன்றி முழுமையாக பணத்தை பெற இந்த இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.