சென்னை அரசு பள்ளியில் இளைஞர் மதவாத சர்ச்சை பேச்சு : கல்வித்துறை கடும் நடவடிக்கை
Youth Religious Controversy Talks in Chennai Govt School: Education Department Takes Strict Action
-
அசோக் நகர் மட்டுமல்லாது, சைதாப்பேட்டை பள்ளியின் தலைமை ஆசிரியரையும் பணியிட மாற்றம் செய்திருக்கிறது -பள்ளி கல்வித்துறை,
-
மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் ஸ்டாலின் ஆணை
சென்னை, செப். 06
சென்னை அசோக் நகரில் அரசு பள்ளி நிகழ்ச்சியில், மகாவிஷ்ணு என்பவர், அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த விவகாரம் குறித்து விசாரணையில் இறங்கிய பள்ளி கல்வித்துறை, அசோக் நகர் மட்டுமல்லாது, சைதாப்பேட்டை பள்ளியின் தலைமை ஆசிரியரையும் பணியிட மாற்றம் செய்திருக்கிறது.
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகாவிஷ்ணு எனும் பேச்சாளரை அழைத்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்றும், மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என மகாவிஷ்னு பேசியுள்ளார். மகாவிஷ்ணு என்ற நபருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த நபரின் மூட நம்பிக்கை பேச்சுகளை கண்டித்த ஆசிரியரை அந்த நபர் கடுமையாக விமர்சித்திருக்கிறார், அதை எவரும் எதிர்த்து கேள்வி கேட்காதது மட்டுமல்லது கேள்வி எழுப்பிய ஆசிரியரை பார்த்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா? என்று அந்த நபர் வினா எழுப்பியுள்ளார்.
இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை விசாரணையில் இறங்கியது. விசாரணையை அடுத்து, அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர், திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
இதனை தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் பணியிடம் செய்யப்பட்டிருக்கிறார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு
இதற்கிடையே அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், அங்கு மாணவர்களிடையே உரையாற்றினார். மேலும், மகாவிஷ்ணு பேச்சுக்குக் கேள்வி எழுப்பிய தமிழ் ஆசிரியர் சங்கரையும் அவர் மேடைக்கு அழைத்துப் பாராட்டினார்.
அப்போது அமைச்சர் அன்பில் மகேஷ் மேலும் பேசுகையில், “பள்ளிக்கூடத்தில் ஏன் என்று கேள்வி எழுப்ப வேண்டும். நமது ஆசிரியர்கள் அனைவரும் அறிவாளிகள் தான். ஆனால், இந்த கேள்வியை இப்போது கேட்க வேண்டுமா என்று நினைக்கிறார்கள். ஆனால், கேள்வி கேட்கவில்லை என்றால் அது பிள்ளைகளுக்குப் பாதிப்பாக அமைந்துவிடும். நம்ம டீச்சரே கேட்கவில்லை. அப்போ சரியாகவே இருக்கும் என மாணவர்கள் தவறான பாதைக்குச் செல்ல நேரிடும். இதன் காரணமாகவே அவர் கேட்டுள்ளார்.
தமிழ் வாத்தியார் சங்கர்
இது எப்படி சாத்தியம் பிற்போக்கு சிந்தனை கொண்டதாக இருக்கிறது என்று கேட்டு இருக்கிறார் சங்கர். அவரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. இதன் காரணமாகவே அவரை மேடையில் அமர வைத்துள்ளேன். அவர் தமிழ் வாத்தியார். தமிழ் எப்போதும் கைவிடாது என்பதை மீண்டும் காட்டிவிட்டார்.
நான் உட்பட யார் பேசினாலும் அதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. யார் சொன்னாலும் நீங்களே அதைச் சிந்தித்துப் பார்த்து எது சரி, எது தவறு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதைத் தான் பெரியாரும் சொன்னார்.
நீங்கள் வலிமையாக இருக்க வேண்டும். கல்வி தான் இங்கு யாராலும் திருட முடியாத சொத்தாகும். ஒரு மழை வெள்ளம் வந்தால் எல்லாமே அடித்துச் சென்றுவிடும். ஆனால், படித்தப் படிப்பு மட்டும் வீண் போகாது. சான்றிதழ் அடித்துச் சென்றாலும் உங்கள் அறிவும், கற்ற கல்வியும் விலகிப் போகாது. எந்த இடத்தில் இருந்தாலும் அறிவு உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.
ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
ஆசிரியர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை விடுத்துக் கொள்கிறேன். இது வேண்டுகோளாகவும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எச்சரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம். பள்ளி குழந்தைகள் எனது பிள்ளைகள். இங்கு யாரை அழைத்து வர வேண்டும் என்பதை அறிவை பயன்படுத்தி நாம் யோசிக்க வேண்டும். வரும் அனைவரையும் அழைத்து வரக்கூடாது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு – அமெரிக்கா இடையே ரூ.850 கோடி வர்த்தக ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், “எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும்.
அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை – தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான – அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன். அறிவியலே முன்னேற்றத்துக்கான வழி” என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்