13 கிராமங்கள், விளைநிலங்களை அழித்து விமான நிலையம் தேவையா ? – 600 வது நாட்களாக போராடும் மக்கள்
13 villages, agricultural lands destroyed and need an airport? – People fighting for 600 days
-
600வது நாள் போராட்டத்தை கடந்த சனிக்கிழமையன்று ஒப்பாரிப் போராட்டமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் விவசாயிகள்.
-
கிராமங்களில் இருக்கும் நிலங்களில் 4791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 3,466 ஏக்கர் நிலம் நன்செய் விவசாய நிலம். 1,317 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் ஏரி, குளம், குட்டை, கால்வாய்கள் போன்றவை
காஞ்சிபுரம், மார்ச் 21
சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 600 நாட்களைக் கடந்திருக்கிறது. திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகச் சொல்கிறார்கள் கிராமத்தினர்.
ஒப்பாரிப் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்க்கும் போராட்டம் பெரிய ஊடக கவனம் இன்றி 600 நாட்களைக் கடந்திருக்கிறது. 600வது நாள் போராட்டத்தை கடந்த சனிக்கிழமையன்று ஒப்பாரிப் போராட்டமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் விவசாயிகள்.
பரந்தூர் கிராமம்
சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பரந்தூர். இந்த பரந்தூர் கிராமம் உள்பட அருகில் உள்ள 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளைக் கையகப்படுத்தி புதிய விமான நிலையத்தை அமைக்க அரசு உத்தேசித்திருக்கிறது.
சென்னை விமான நிலையத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியாது என்பதால் அதற்கு இணையாக ஒரு விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்பது நீண்ட காலமாகவே, கிட்டத்தட்ட 80களில் இருந்தே உத்தேசிக்கப்பட்டு வந்தது. இதற்காக போரூர், ஸ்ரீபெரும்புதூர் என பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டுவந்தன. இறுதியாக தற்போது பரந்தூர் பகுதி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்தத் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அறிவிப்புச் செய்யப்பட்டது. பரந்தூரில் அமையவிருக்கும் இந்த புதிய விமான நிலையத்தில் இரண்டு ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்புப் பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் ஆகியவை இடம்பெறும் எனக் கூறப்பட்டது.
3,466 ஏக்கர் நிலம் நன்செய் விவசாய நிலம்
இந்தத் திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரந்தூர், வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், தொடரூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் நிலங்களில் 4791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 3,466 ஏக்கர் நிலம் நன்செய் விவசாய நிலம். 1,317 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் ஏரி, குளம், குட்டை, கால்வாய்கள் போன்றவை அமைந்துள்ளன.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இப்பகுதி மக்கள் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இந்தத் திட்டத்திற்காக முழுமையாக கையகப்படுத்தப்படவிருக்கும் ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.
கிராம பஞ்சாயத்துகளில் திட்டத்தை எதிர்த்து தீர்மானம்
திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஏகனாபுரம் மக்களின் நிம்மதி பறிபோயிருக்கிறது. தினமும் இரவு நேரங்களில் இந்தத் திட்டத்தை எதிர்த்து கூட்டம் நடத்துவது, கிராம பஞ்சாயத்துகளில் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவது, கிராமசபை கூட்டங்களைப் புறக்கணிப்பது என பல வகைகளிலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர்.
இருந்தபோதும், இந்தத் திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்வது இவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் 600-ஆவது நாள் போராட்டத்தை, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒப்பாரிப் போராட்டமாக நடத்தினர். போராட்டம் நடந்த சனிக்கிழமையன்று, பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் பெரிய அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
அந்தந்த கிராமங்களிலேயே போராட்டம்
அன்று மட்டுமல்ல, பெரிய அளவில் போராட்டம் நடக்கும் தினங்களில், இந்தப் பகுதி முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது. இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில்கூடி போராட்டம் நடத்துவது பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. அந்தந்த கிராமங்களிலேயே போராட்டம் நடத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வருடம் முழுவதும் நெல்
ஆனால், இப்பகுதி மக்கள் இந்த விவகாரத்தை அப்படியே விடுவதாக இல்லை. ஏகனாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு இங்கே வெறும் 53 சென்ட் நிலம்தான் இருக்கிறது. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் நெல் தனக்கு வருடம் முழுவதும் போதுமானதாக இருக்கிறது என்கிறார் அவர். அந்த நிலத்தை பிடுங்கிக்கொண்டுவிட்டு, எத்தனை லட்சம் தந்தாலும் அது தனக்கு தேவையில்லை என்கிறார் அவர்.
“இது டெல்டா மாவட்டங்களைப் போல ஆற்றை நம்பியிருக்கும் பாசனப்பகுதி அல்ல. ஏரியில் தண்ணீரை நிரப்பி, அதன்மூலம் விவசாயம் செய்துவருகிறது. அரசின் எந்த உதவியும் இல்லாமல் வாழ்ந்துவருகிறோம். இதை எடுத்துக்கொண்டு அவர்களால் எத்தனை கோடி தர முடியும்?” என்கிறார் அவர்.
20,000 கோடி ரூபாய் செலவில் விமான நிலையம்
பரந்தூரில் உத்தேசிக்கப்பட்டிருக்கும் விமான நிலையத்தைப் பொறுத்தவரை, 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு 2030க்குள் செயல்பாட்டிற்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது. வருடத்திற்கு பத்து கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இந்த விமான நிலையம் திட்டமிடப்படுகிறது.
விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்த நிலையில், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆகியோர் போராடும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினர்.
நிலத்தின் மதிப்பைப் போல 3.5 மடங்கு
அந்தப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், நிலங்களுக்கு இழப்பீடாக நிலத்தின் மதிப்பைப் போல 3.5 மடங்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகள், கவலைகள் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும் என்றும் அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, அதாவது நவம்பர் நான்காம் தேதி பரந்தூர் விமான நிலையம் ஏன் அவசியம் என ஒரு அறிக்கை தமிழக அரசிடமிருந்து வெளியானது.
அடுத்த சில நாட்களில் இந்தத் திட்டம் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இந்தத் திட்டத்திற்கான Techno – Economic ஆய்வு மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியது டிட்கோ நிறுவனம். இதையடுத்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். அரசு மீண்டும் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், அதில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
இதற்குப் பிறகு, பரந்தூரில் விமான நிலையம் வந்தால் இந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற எதிர்ப்புக் குரல் எழுந்த நிலையில், அது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஒரு நிபுணர் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை இப்போதுவரை வெளியாகவில்லை.
ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் போராட்டத்தைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இதற்குக் காரணம், 908 ஏக்கர் பரப்பளவும் 2,400 பேர் மக்கள் தொகையும் கொண்ட இந்த கிராமம், இந்தத் திட்டத்திற்காக முழுமையாக எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது.
அரசு எவ்வளவு இழப்பீடு அளித்தாலும் இந்த இடத்தை விட்டுப் போக முடியாது என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ. “நாங்கள் பிறந்த பூமி இது. மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாகச் சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் 13 ஆயிரம் ரூபாய் என வழிகாட்டு மதிப்பீடுகள் சொல்கின்றன. ஆனால், பக்கத்திலேயே ஒரு சதுர அடி நிலம் 4 ஆயிரம் ரூபாய்வரை விற்கிறது. ஆக இழப்பீடு என்பதை எந்த அடிப்படையில் தருவார்கள்?” எனக் கேள்வி எழுப்புகிறார் இளங்கோ.
ஏகனாபுரம் கிராமத்தில் சுமார் 600 வீடுகள் இருக்கின்றன. 800 ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன. 1,700 வாக்காளர்கள் இங்கே இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது இவர்களுக்கு அச்சமளிக்கிறது.
தூக்கமே வருவதில்லை
ஏகனாபுரத்தைச் சேர்ந்த பண்டேரிக்கு இங்கே மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து தனக்கு தூக்கமே வருவதில்லை என்கிறார். “நான்கு தலைமுறையாக இந்தப் பகுதியில் நாங்கள் விவசாயம் செய்துவருகிறோம். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றன. வீட்டை வேறு கடன் வாங்கிக் கட்டிவிட்டோம். நிலத்தையும் வீட்டையும் எடுத்துக்கொண்டால் அம்போவென போய்விடுவோம். இதையே நினைத்துக்கொண்டிருப்பதால் இரவெல்லாம் தூக்கமில்லை. இதுவரை அரசாங்க அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ வந்து எங்களைப் பார்க்கவில்லை. கொரோனா காலகட்டத்தில்கூட நிலமிருந்ததால் பசியில்லாமல் இருநதோம். எங்களை இங்கிருந்து அடித்து விரட்டினாலும் செத்துப் போவோமே தவிர, ஊரைவிட்டுப் போகமாட்டோம்” என்கிறார் அவர்.
இவ்வளவு நாட்களாகப் போராடியும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்காக குரல் கொடுக்கவில்லையே என்ற வருத்தம் இவர்களுக்கு மிகக் கடுமையாக இருக்கிறது. அந்தப் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கு. செல்வப்பெருந்தகை, இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் என்றாலும், அது தொடர்பாக வேறு எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்கிறார்கள் கிராம மக்கள்.
தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலை
அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர். பாலு, இதுவரை இந்தப் பக்கமே வரவில்லை என்பது இவர்களை வெகுவாக ஆத்திரப்படுத்தியிருக்கிறது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியிருக்கும் நிலையில், தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலைக்கு இப்பகுதி மக்கள் வந்திருக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு
“மக்கள் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை இங்குள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கட்சி பேதமற்று சேர்ந்து போராடுகிறோம். எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை எப்போதாவது குரல் கொடுப்பார். போராட்டத்திற்கு வரமாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு இந்தப் பகுதிக்கு வந்ததே கிடையாது. ஓட்டுக் கேட்கும்போது, நான் எம்.பியானால் இந்தத் திட்டம் வராது என்று வாக்களித்தார். அப்படிச் சொல்லிவிட்டுப் போனவர்தான். ஒரு அறிக்கைகூட விடவில்லை. மக்களைச் சந்திக்கவும் இல்லை. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கக்கூட வரவில்லை.
இந்த முறை நாங்கள் தேர்தலை முற்றிலுமாக புறக்கணிக்கப்போகிறோம். விவசாயிகளை மதிக்காவிட்டால், விவசாயிகள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு ஏன் தேவைப்படுகிறது? ஜனநாயகத்தை மதிக்காதவர்கள், வாக்காளர்களின் உரிமையை என்ன மதிக்கப்போகிறார்கள்? அதனால் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்” என்கிறார் பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவின் செயலாளர் சுப்பிரமணியன்.
இந்தப் புதிய விமான நிலையத் திட்டத்தில் 13 கிராமங்களின் நிலம் கையகப்படுத்தப்படும் என்றாலும் ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் ஆகிய மூன்று கிராமங்களில்தான் எதிர்ப்பு தீவிரமாக இருக்கிறது.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
நெல்வாய் கிராமத்தைப் பொறுத்தவரை, சுமார் 900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவிருக்கிறது. இதில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலமாகவும் 300 ஏக்கர் நிலம் அரசின் புறம்போக்கு நிலமாகவும் உள்ளது. இங்கிருக்கும் விவசாயிகளும் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகச் சொல்கிறார்கள்.
“எம்.எல்.ஏ., எம்.பி. என யாரும் இதுவரை இங்கே வந்து கேட்கவில்லை. அரசும் சரி, அரசியல்வாதிகளும் வந்து எதுவும் கேட்கவில்லை. அவர்களாக சர்வே எண்ணை குறிப்பிட்டு, அந்த நிலங்களை எடுக்கப்போகிறோம், ஆட்சேபணை தெரிவியுங்கள் என்கிறார்கள். நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போகிறோம். நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாகத் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்” என்கிறார் நெல்வாயைச் சேர்ந்த விவசாயியான குணசேகரன்.
சிறு அளவில் நிலங்கள் தேவைப்படும் சிறுவள்ளூர், அக்கமாபுரம், பொடவூர் ஆகிய இடங்களில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : மக்களவைத் தேர்தல் : தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு
இதற்கிடையில் இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை, காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு அளித்த விண்ணப்பத்தை டிட்கோ நிறுவனம் திரும்பப்பெற்றிருக்கிறது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் டிட்கோ விண்ணப்பிக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் இருக்கிறது.
ஆகவே, மிகவும் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய சில கிராமங்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கலாம். இங்கு வாக்காளர் எண்ணிக்கை குறைவு என்பதால், தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால், மக்களிடம் தங்கள் கொண்டு சேர்க்க இது உதவும் என நம்புகிறார்கள் இப்பகுதி மக்கள்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்