
எனது வீட்டில் வருமானவரித்துறை சோதனை ஏதும் நடைபெறவில்லை – அமைச்சர் செந்தில் பாலாஜி
no income tax raid in my house – minister senthil balaji
-
சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் திமுகவினர் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு
-
செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டிற்கு ரெய்டு நடத்த வந்த ஐ.டி அதிகாரிகளிடம், ஐடி கார்டு இருக்கிறதா எனக் கேட்டு வாக்குவாதம்
சென்னை, மே..26
கரூர் உட்பட தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ஐ.டி ரெய்டு நடைபெற்று வரும் நிலையில் செந்தில் பாலாஜி சென்னையில் இருக்கிறார். இன்றும் அவர் தனது துறை சார்ந்த கூட்டங்களில் பங்கேற்றுள்ளார்.
வருமான வரித்துறையினர் சோதனை
இன்று காலை 7 மணி முதல் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்கள் என 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நிறுவனங்களில் ரெய்டு
தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, கரூர், திருப்பூர் ஆகிய ஊர்கள் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு, கர்நாடக மாநிலம் பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலம் ஹைதராபாத் பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள், நிறுவனங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மற்றும் மின்சாரத்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை நடைபெறும் அனைத்து இடங்களிலும் திமுகவினர் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
கோவையில் சோதனை
கோவையில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் இந்த சோதனை நடந்தது. கோவை கோல்டு வீன்ஸ் பகுதியில் உள்ள திமுகவை சேர்ந்த செந்தில் கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
பணி வழங்குவதாக கூறி பண மோசடி
அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, பணி வழங்குவதாக கூறி பண மோசடி செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை தொடர்ந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அதிமுக மற்றும் பாஜகவினர் ஆளுநரிடம் புகார்
கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக மற்றும் பாஜகவினர் ஆளுநரை சந்தித்து செந்தில் பாலாஜி பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதாக புகார் மனு அளித்ததுடன், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.
இதையும் படியுங்கள் : 1 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7 திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்த நிலையில் தான் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. கரூரில் ரெய்டு நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரியின் காரை திமுகவினர் உடைத்து சேதப்படுத்தினர்.
துறை ரீதியிலான கூட்டத்தில் பங்கேற்பு
மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீட்டிற்கு ரெய்டு நடத்த வந்த ஐ.டி அதிகாரிகளிடம், ஐடி கார்டு இருக்கிறதா எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடாமல் காவல் நிலையத்திற்குச் சென்றனர்.
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி
ஐடி ரெய்டு, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் திமுகவினர் பிரச்சனை என தமிழ்நாடே பரபரத்துக் கிடக்கும் சூழலில் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் இருந்து வருகிறார். இன்று தலைமைச் செயலகத்தில் தனது அறைக்குச் சென்ற அவர், துறை ரீதியிலான கூட்டத்தில் பங்கேற்றார்.
வருமான வரித்துறை ரெய்டு நடைபெறும் சூழலில் தனது அமைச்சர் அலுவலகத்திற்கு வந்த செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு ரெய்டு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சிரித்தபடியே கூலாக, “இருங்க மீட்டிங் முடிச்சிட்டு வரேன்” எனக் கூறிவிட்டு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் ரெய்டு பற்றி கேள்வி எழுப்பவே, “எனது சென்னை மற்றும் கரூர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை ஏதும் நடைபெறவில்லை. எனது தம்பி மற்றும் அவருக்கு தெரிந்தவர்களின் வீடுகளில் தான் ரெய்டு நடக்கிறது” என விளக்கம் அளித்தார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.