
அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்தும் கொடூரமாக நடந்துள்ளது அமலாக்கத்துறை – முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்
The enforcement department has been brutal despite the cooperation of Minister Senthil Balaji in the investigation – Chief Minister Stalin strongly condemns
-
பா.ஜ.க. இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருவதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் அறிவார்கள்
-
பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது.
சென்னை, ஜூன் 14
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று செந்தில்பாலாஜி கூறிய பிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடி கொடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்படி சந்திப்பார் செந்தில் பாலாஜி
அமலாக்கத்துறை அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுவதாகவும் என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார் எனவும் முதல்வர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள பரபரப்பு அறிக்கை வருமாறு;
‘தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன்.
அமலாக்கத்துறை சோதனை
அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். இந்த நிலையில் தேவையில்லாத வகையில் அத்துமீறி – அனுமதியின்றி பலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள் : ஜாதி அடிப்படையில் பதவி உயர்வு கூடாது ; பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு – உச்ச நீதி மன்றம் உத்தரவு
தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு
தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள். இதனைக் கண்டித்து விரிவான அறிக்கையை நான் நேற்று மாலையே கொடுத்துள்ளேன். நான் மட்டுமல்ல, அகில இந்திய கட்சித் தலைவர்களும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் இதனைக் கண்டித்துள்ளார்கள். ஏனென்றால் இதுமாதிரி பா.ஜ.க. இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருவதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் அறிவார்கள். அதுதான் இங்கும் நடக்கிறது.
மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லை
விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள். நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார்.
மனிதநேயமற்ற முறை
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்? இந்த வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது தேவையா? அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது. என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார். எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க. உறுதியுடன் எதிர்கொள்ளும். பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.