
Passenger jet and military helicopter collide in the United States: 67 people killed?
-
விமான நிலையத்தின் வடக்கில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஜார்ஜ் வாஷிங்டன் பார்க்-வே வரையில் தேடுதல் நடவடிக்கை
-
விமானம், ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட காட்சி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கென்னடி மையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் மோதல் சம்பவம் வானில் ஒரு மிகப்பெரிய தீப்பந்து உருவானது போல காட்சிகள் பதிவாகி உள்ளதாக தகவல்.
வாஷிங்டன், ஜன.30
அமெரிக்காவில் வாஷிங்டன் அருகே பயணிகள் விமானமும் ராணுவ ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில், அவற்றில் பயணம் செய்த 67 பேரை தேடி வருகின்றனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு அருகிலுள்ள ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் தரையிறங்கும் போது பயணிகள் விமானம் ஒன்று, ராணுவ ஹெலிகாப்டருடன் மோதியது. இந்த விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் பயணித்துள்ளனர். இந்நிலையில் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள போடோமாக் ஆற்றில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குதல் மற்றும் புறப்பாடு சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (ஜன.29) இரவு 9 மணி அளவில் நடந்துள்ளது. இது இந்திய நேரப்படி வியாழக்கிழமை (ஜன.30) காலை 7.30 மணி ஆகும்.
விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு படகுகள் மற்றும் ராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை உட்பட பல்வேறு முகமைகளின் ஹெலிகாப்டர்கள் உயிர் பிழைத்தவர்களை தேடி வருகிறது. விமான நிலையத்துக்கு வடக்கு பகுதியில் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையத்தின் வடக்கில் உள்ள ஒரு பகுதியில் இருந்து ஜார்ஜ் வாஷிங்டன் பார்க்-வே வரையில் தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள் : ‘ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும்’ – திமுக எம்.பி.க்கள் குழு கூட்டத்தில் தீர்மானம்
இந்த விபத்து குறித்து அமெரிக்க ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகம் “கன்சாஸ் மாகாணத்தில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட விமானம், ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலைய ஓடுபாதையை நெருங்கும் போது ராணுவத்தின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மீது நடுவானில் மோதியது.” எனத் தெரிவித்துள்ளது.

விபத்தில் சிக்கிய விமானம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமானது. இதை அந்த நிறுவனம் சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளது. தங்களுக்கு கூடுதல் தகவல்கள் கிடைத்ததும் விவரங்களை பகிர்வதாக கூறியுள்ளது.
விமானம், ஹெலிகாப்டர் மோதிக்கொண்ட காட்சி விமான நிலையத்துக்கு அருகில் உள்ள கென்னடி மையத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதில் மோதல் சம்பவம் வானில் ஒரு மிகப்பெரிய தீப்பந்து உருவானது போல காட்சிகள் பதிவாகி உள்ளதாக தகவல்.
இந்த விபத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் 5342 என்ற பயணிகள் ஜெட் விமானம் சிக்கியது. விமான நிலையத்துக்கு அருகே விபத்தில் சிக்கிய விமானம் சுமார் 400 அடி உயரத்திலும் மணிக்கு 140 மைல் வேகத்திலும் வந்து கொண்டிருந்தது. கடைசியாக அந்த விமானத்தில் இருந்து கிடைத்த தரவுகள் இது.
விபத்தில் சிக்கிய இந்த விமானம் கனடாவில் கடந்த 2004-ல் தயாரிக்கப்பட்டது. இரட்டை எஞ்சின் கொண்ட இந்த விமானத்தில் 70 பயணிகள் பயணிக்க முடியும். இந்த விபத்து குறித்து அதிபர் ட்ரம்புக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே ஜனவரி மாதத்தில் கடந்த 1982-ம் ஆண்டு ஏர் புளோரிடா விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் போடோமாக் ஆற்றில் விபத்தில் சிக்கியது. அதில் 78 பேர் உயிரிழந்தனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.