பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம்: முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரண்
Bribes for School Recognition: Former MLA Muthukumar Surrenders Before Special Court for Corruption Cases
-
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், சங்க மாநிலப் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு
-
முத்துக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில், அன்பில் மகேஸூக்கு ஜாமின் மறுக்கப்படலாம் என்பதால், தற்போது அவர் சரணடைந்துள்ளதாக தகவல்
சென்னை, அக். 29
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க லஞ்சம்: முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சரண்: திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக சரணடைந்தார்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி நடந்ததாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் போலீஸில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், சங்க மாநிலப் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 26ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அன்பில் மகேஸுக்கு முன்ஜாமீன் வழங்க காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
“இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் தலைமறைவாக உள்ளார். அவரை அன்பில் மகேஸ் பாதுகாத்து வருகிறார். முத்துக்குமாரையும் அன்பில் மகேஸையும் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, அன்பில் மகேஸுக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது.” என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
காவல்துறையின் இந்த வாதத்தை ஏற்று, அன்பில் மகேஸின் முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அன்பில் மகேஸ் உடனடியாக கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று (வியாழன்) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வரவிருக்கிறது.
இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி முன்பாக சரணடைந்துள்ளார். முத்துக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில், அன்பில் மகேஸூக்கு ஜாமின் மறுக்கப்படலாம் என்பதால், தற்போது அவர் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.






