அன்பில் மகேஸ் தாக்கல் செய்த வழக்கு ரத்து மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
Hearing Adjourned on Anbil Mahesh’s Petition to Quash Case
‘தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா? அரசியல் சாசனத்துக்கு விரோதமாக போலீஸார் நடந்து கொண்டுள்ளது’
சென்னை, அக். 29
அன்பில் மகேஸ் தாக்கல் செய்த வழக்கு ரத்து மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு: ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நவம்பர் 10-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, நூறு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பில் ஆஜாரன தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன், ‘மனுதாரர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்திருக்கிறார்’ என தெரிவித்தார்.
அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘அன்பில் மகேஸின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது, 40-க்கும் மேற்பட்ட போலீஸார், தனது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அன்பில் மகேஸை கைது செய்துள்ளனர்’ என புகார் தெரிவித்தார்.
மேலும், ‘தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறதா? அரசியல் சாசனத்துக்கு விரோதமாக போலீஸார் நடந்து கொண்டுள்ளது’ என குற்றம்சாட்டினார்.
அதற்கு காவல் துறை தரப்பில், ‘மூத்த வழக்கறிஞர் அலுவலகத்தின் வெளியே ஒன்றரை மணி காத்திருந்துதான் அன்பில் மகேஸை கைது செய்தோம். வழக்கறிஞரின் அலுவலகத்தினுள் கைது செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை நவம்பர் 10-ஆம் தேதிக்கு நீதிபதி லட்சுமிநாராயணன் தள்ளிவைத்துள்ளார்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.






