தமிழ்நாடு – அமெரிக்கா இடையே ரூ.850 கோடி வர்த்தக ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து
Chief-Minister-Stalin-signs-Rs-850-crore-trade-agreement-between-Tamil-Nadu-and-USA
-
அமெரிக்க நாட்டின் சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து.
-
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது
சென்னை, செப். 06
தமிழ்நாடு – அமெரிக்கா இடையே ரூ.850 கோடி வர்த்தக ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து: லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 5.9.2024 அன்று சிகாகோவில் மேற்கொள்ளப்பட்டன.
லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம்
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 5.9.2024 அன்று அமெரிக்க நாட்டின் சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அதேபோல், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், விஸ்டியன் நிறுவனத்துடன் 250 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், என மொத்தம் ரூ.850 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் என்கிற பொருளாதார இலக்கை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்க நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இப்பயணத்தின் போது, சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகில் 10 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிகாகோ நகரில் 4.9.2024 அன்று ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
உலகின் முன்னணி காலணி மற்றும் விளையாட்டு ஆடைகள் தயாரிப்பு நிறுவனமான நைக்கி மற்றும் உலகின் முன்னணி ஹெல்த்கேர் நிறுவனமான ஆப்டம் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதல்வர் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
இதனிடையே தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில் 5.9.2024 அன்று சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம் வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் 160-க்கும் மேற்பட்ட நாடுகளையும் 42 உற்பத்தி இடங்களையும் உள்ளடக்கிய உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனை அலுவலகங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
விஷய் பிரிஷிஷன் நிறுவனமானது செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களின் உற்பத்தி நிறுவனமாகும். தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 100 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டியூசர்ஸ் உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்தின் முதுநிலை விற்பனை மேலாளர் ஷிர்வர் ஸ்டீபன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
விஸ்டியன் நிறுவனமானது ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இது உலகளாவிய வாகன மின்னனுவியல் சப்ளையர் நிறுவனமாகும். தமிழ்நாடு முதல்வர் முன்னிலையில், விஸ்டியன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே.விஷ்ணு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்