சி.ஆர்.பி.எப். தேர்வை இனி தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம் – திமுக போராட்ட அறிவிப்பால் பணிந்தது ஒன்றிய அரசு
CRPF The exam can now be written in 13 languages including Tamil - Union government bowed to the DMK strike notice
-
போராட்டமின்றி ஸ்டாலின் வெற்றி பெற்றிருப்பதாக திமுக மாணவரணி -இளைஞரணி பெருமிதம்
-
அவரவர் தாய் மொழியில் கல்வி கற்கவும், தேர்வுகள் எழுதவும் வாய்ப்புகள் வழங்குவது என்பதே நீதி
சென்னை, ஏப் .15
சி.ஆர்.பி.எஃப். தேர்வை தமிழில் நடத்த வைக்கும் விவகாரத்தில், போராட்டமின்றி ஸ்டாலின் வெற்றி பெற்றிருப்பதாக திமுக மாணவரணி -இளைஞரணி பெருமிதம் தெரிவித்துள்ளது.
உதயநிதி அறிவிப்பு
இது தொடர்பாக திமுக மாணவரணி செயலாளர் எழிலரசனும், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்.) பணியிடத்திற்கான கணினித் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறும் என்று அறிவித்ததை மாற்றி, தமிழ் உள்ளிட்ட மாநில அலுவல் மொழிகளில் தேர்வினை நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 09.04.2023 அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதையும் படியுங்கள் : தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் கணினி தேர்வினை நடத்த தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்”
தாய் மொழியில் தேர்வு
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சமூகநீதி காத்திட இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கக்கூடிய சமவாய்ப்பு, சமஉரிமை, சமூகநீதி ஆகியவற்றை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்கு ஏதுவாக, அவரவர் தாய் மொழியில் கல்வி கற்கவும், தேர்வுகள் எழுதவும் வாய்ப்புகள் வழங்குவது என்பதே நீதியாகும்.
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து இந்தியை மட்டுமே உயர்த்தி பிடித்து, பிற மொழிகளை தாழ்த்தி கொண்டிருப்பதை நாடறியும். கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கழக இளைஞர் அணி-மாணவர் அணி இணைந்து வரும் 17.04.2023 அன்று, சென்னை, சாஸ்திரி பவன் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் வலியுறுத்தியதை ஏற்று, ஒன்றிய உள்துறை அமைச்சகம் சி.ஆர்.பி.எப். தேர்வினை இனி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என அறிவித்திருப்பது தமிழ்நாட்டு இளைஞர்கள் மட்டுமல்ல இந்தி பேசாத மாநில இளைஞர்களுக்கும் மகிழ்ச்சிக்கரமான நம்பிக்கைக்குரிய ஒரு செய்தியாகும்.
முதலமைச்சருக்கு நன்றி
தன்னுடைய ஆளுமையின் காரணமாய் போராட்டமின்றி சி.ஆர்.பி.எப். தேர்வினை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதும் உரிமையினை பெற்றுத் தந்த கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சருக்கு, தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.