Government negligence is the reason for sexual violence against women
* மணிப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை மணிப்பூரில் உள்ள இன குழுக்களுக்கு இடையில் அவ்வப்போது வன்முறை வெடித்திருக்கிறது. ஆனால் இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை-மணிப்பூர் பெண்கள்
இனக்குழுகளுக்கு இடையில் பிரச்னை எழும்ப காரணம் என்ன தெரியுமா? போலி செய்திகள்தான், போலி செய்திகள் எங்கள் மக்கள் ஒருவரை ஒருவர் அடித்து சாகுபடி செய்திருக்கிறது-மணிப்பூர் பெண்கள்
இம்பால், ஜூலை. 25
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு அரசின் அலட்சியமே காரணம்: மணிப்பூரில் தொடரும் வன்முறை அடுத்து மிசோரம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு பரவிவருவதால், பாதிக்கப்பட்ட உறவினர்களுக்கு எந்த நிவாரண பொருட்களையும் அனுப்ப முடியவில்லையே என்ற பெரும் துயரத்தில் உள்ளனர் தமிழ்நாட்டில் வாழும் மணிப்பூர் மக்கள்.
வன்முறைக்கு 100க்கும் மேற்பட்டோர் பலி
மணிப்பூரில் மெய்தேய் மற்றும் குகி இன மக்களுக்கு இடையில் நடந்து வரும் வன்முறையில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
முதலில், குகி இன பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தி, அடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகின. பின்னர், மெய்தேய் இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளான காட்சிகள் வெளியாகின. இன்னும் பல காணொளிகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இரண்டு மாதங்களாக மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வசிக்கும் மணிப்பூர் மக்கள் பலரும் இதுபோன்ற காணொளிகள் வெளியாவதால் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களில் நிவாரண முகாம்களில் வசிக்கும் பலருக்கும் சுமார் ரூபாய் ஒரு லட்சத்துக்கு செல்போன் ரீசார்ஜ் செய்து உதவியதாகவும், தங்களது உறவினர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவது குறித்து தற்போது ஆலோசித்து வருவதாகவும் மணிப்பூர் பெண்கள் தெரிவித்தனர்.
தமிழக மணிப்பூர் மக்கள் குமுறல்
தமிழ்நாட்டில் வசிக்கும் மணிப்பூர் மக்கள், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தற்போது மணிப்பூரில் இனரீதியான வன்முறை நடைபெறுவதால், தங்களது இனங்களின் பெயர்களை அவர்கள் வெளியிடவிரும்பவில்லை என்று தெரிவித்தனர். தமிழ்நாட்டில் வசிக்கும் மணிப்பூர் மக்கள் ஒற்றுமையாக இருப்பதாகவும், வன்முறை காணொளிகள் தங்களை பெரிதும் பாதிப்பதாக கூறுகின்றனர்.
சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு புலம்பெயர்ந்தவர் ருமி. பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த அவர், கடந்த மே மாதம் மணிப்பூரில் தொடங்கிய வன்முறையை அடுத்து வேலையை விட்டுவிட்டு , நிவாரண பொருட்களைச் சேகரிப்பது, தமிழ்நாட்டில் வசிக்கும் மணிப்பூர் மாணவர்களுக்கான உதவிகளை செய்வது ஆகிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு அரசின் அலட்சியமே காரணம்
”மணிப்பூரில் மெய்தேய், குகி, நாகா உள்ளிட்ட 38 விதமான இன மக்கள் வாழ்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக பலமுறை மணிப்பூரில் உள்ள இன குழுக்களுக்கு இடையில் அவ்வப்போது வன்முறை வெடித்திருக்கிறது. ஆனால் இந்திய அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
இனக்குழுகளுக்கு இடையில் பிரச்னை எழும்ப காரணம் என்ன தெரியுமா? போலி செய்திகள்தான், போலி செய்திகள் என்ன செய்திருக்கிறது பார்த்தீர்களா? எங்கள் மக்கள் ஒருவரை ஒருவர் அடித்து சாகுபடி செய்திருக்கிறது, எங்கள் பெண்களை நிர்வாணப்படுத்தி எங்கள் ஒவ்வொருவரையும் மரணத்தின் எல்லைக்கு கொண்டு சேர்த்திருக்கிறது,” என அதிர்ச்சி கலந்த தொனியில் கூறினார் ருமி.
வாட்சப், யூட்யூபகளில் வதந்தி
கடந்த இரண்டு ஆண்டுகளில் பல விதமான செய்திகள் வாட்சப், யூட்யூப் தளங்களில் பரவியதாகவும், அரசியல் தலைவர்கள் யாரும் மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதனால் மிகவும் பாதிக்கப்பட்டது சாதாரண மக்கள்தான் என்கிறார். ஒரு இன குழுவைப் பற்றி மற்றொரு இன குழுவினர் போலி வீடியோவை வெளியிடுவது தொடர்ந்து நடைபெற்றது.
”ஒரு குழு கோயில்களை இடிக்கிறார்கள், மற்றொரு குழுவினர் தேவாலயங்களை இடிக்கிறார்கள். அது பல்வேறு விதமாக சித்தரிக்கப்படுகிறது. உண்மையில், இன பிரச்னை, தற்போது மதரீதியான பிரச்னையாக மாறிவிட்டது,” என்று சொல்லும்போது, ருமியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.
”என் அண்ணனின் குழந்தை இவள். சரியாக பேசக்கூடத் தெரிய இரண்டு வயது குழந்தை. ஆனால் இவள் விளையாடும்போது, ஆர்மி ஆர்மி என்ற வார்த்தையை உச்சரிக்கிறாள், டூ டூ என்று சுடுவது போல விளையாடுகிறாள். ஏழு, எட்டு வயது குழந்தைகள் விளையாட்டிற்கு பதிலாக சில காலமாக, ‘நான்தான் மெய்தேய், நீ குகி, வா இரண்டு பேரும் சண்டை போடலாம்’ என்று சொல்லி அடித்துக்கொண்டு விளையாடுகிறார்கள்.
மக்களை பற்றி அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை
இதில் இருந்து புரிந்துகொள்ளுங்கள் எங்கள் சமூகம் என்னவாக மாறிக்கொண்டு இருக்கிறது என்று. எங்களை பற்றி அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை. எங்கள் ஒட்டு மட்டும்தான் அவர்களுக்கு வேண்டும். பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்த வீடியோ வைரல் ஆகவில்லை எனில், எங்களை பற்றி யாரும் பேசியிருக்கக்கூட மாட்டார்கள்,” என வருத்தத்துடன் பேசுகிறார் ருமி.
இதையும் படியுங்கள் : பாஜக அரசு இந்திய மக்களை அச்சுறுத்துகிறது -அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
சில மாதங்களாக தனது உறவினர்கள் பலரும் தங்களது வீட்டின் நுழைவு பகுதியில், சிறிய பை ஒன்றை மாட்டிவைத்திருக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார்கள் என்கிறார் மற்றொரு பெண் ரிட்டா.
மக்கள் வெளியேற முடியாமல் விமான டிக்கெட் விலை ஏற்றம்
”ஒரு பையில் தங்களது குழந்தைகளின் கல்வி சான்றிதழ்கள், சில மருந்துகளை மட்டும் வைத்திருப்பார்கள். எப்போது வேண்டுமானாலும் தங்களது வீடுகள் கொளுத்தப்படலாம், இடிக்கப்படலாம் என்ற அச்சத்தில் இருப்பார்கள். மே மாதம் வன்முறை வெடித்த அடுத்த இரண்டு வாரங்களில் இம்பால் நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது பற்றி யாராவது பேசியிருக்கிறார்களா? மக்கள் உயிருக்கு பயந்து வெளியேறும் நேரத்தில் விமான டிக்கெட் விலையை உயர்த்திவிட்டார்கள்.
என் உறவினர்களை எப்போது பார்ப்பேன், அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறை பேசும்போது, வேறு முகாம்களுக்கு போவதாக சொல்கிறார்கள்,” என சீற்றத்துடன் பேசினார் ரிட்டா.
தண்ணீர் பாட்டிலுக்கு 3 கிலோமீட்டர் வரை நீண்ட வரிசை
”நிவாரண முகாம்களில் பிறந்து பத்து நாட்களே ஆன குழந்தையை கையில் வைத்துக்கொண்டு ஒரு பெண் சாப்பாட்டிற்காக ஏங்குகிறார். முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என் உறவினர்கள் ஒரு சிறிய தண்ணீர் பாட்டிலுக்காக மூன்று கிலோமீட்டர் வரை நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். இதுதான் எங்கள் ஊரின் நிலை,” என பெருகிய கண்ணீரை துடைத்துக்கொண்டு சொல்கிறார் ரிட்டா.
அமைதி ஏற்படுத்த அரசு முயற்சி எடுக்கவில்லை
ராணுவ அதிகாரிகளை வைத்து நிவாரண முகாம்களில் உணவு கொடுக்கிறார்கள் என்றும் மக்களுக்கு தேவை அமைதி என்றும் அதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுக்கவில்லை என்றும் ரிட்டா குற்றம்சாட்டுகிறார். ”எங்கள் மக்கள் மத்தியில் வித்தியாசங்களை அதிகப்படுத்தியது யார்? மெய்தேய், குகி மக்களுக்கு இடையில் நடந்த பிரச்சனைகள் வெளிவந்துவிட்டது. இன்னும் பல இனங்களுக்கு இடையில் நடந்த பிரச்னைகள் பற்றிய வீடியோ வந்தால்தான் அரசாங்கம் விழித்துக்கொள்ளுமா? இன்னும் எத்தனை வீடியோ உங்களுக்கு வேண்டும்?,” என்கிறார் ரிட்டா.
போலி செய்தியால் நாசம் அதிகரிப்பு
பல்வேறு இனங்களுக்கு மத்தியில் பல காலமாக சண்டைகள் இருந்தாலும், தற்போது போலி செய்திகள் பரப்பி விடப்பட்டதால், பொது இடங்களில் குழு குழுவாக சேர்ந்து மக்கள் நாசம் செய்யும் சம்பவங்கள் அதிகரித்தது என்கிறார்கள் இந்த பெண்கள்.
வேலை இல்லை, உணவு இல்லை, ஒளிந்து கொள்ள இடம் இல்லை
கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வன்முறை படிப்படியாக ஒவ்வொரு கிராமங்களை தின்று தீர்த்தது, பல கிராமங்கள் என வன்முறையின் கோரப்பிடியில் சிக்கி, மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தார்கள், வேலை இல்லை, குழந்தைகளுக்கு உணவு இல்லை, ஓடி ஒளிந்து கொள்வதற்குகூட இடம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள் பரிதாபமாக.
பெண்களை சூறையாடுவதுதான் இனத்தின் வெற்றியா?
”வன்முறை உச்சமாகி, இரண்டு இனங்களைச் சேர்ந்த ஆண்கள், மாற்று இனத்தைச் சேர்ந்த பெண்களை குறிவைத்தனர். குகி இன பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்த வீடியோ, மெய்தேய் இன பெண்கள் மோசமானவர்கள் என்று வசைபாடும் வீடியோ என பல காணொளிகள் வந்துவிட்டன.
பெண்களை சூறையாடுவதுதான் இனத்தின் வெற்றியா? இந்தியாவில் பெண் கல்வியை ஊக்குவிக்க ‘பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்’ (பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம்) என்ற திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். முதலில் பெண்களை எப்படி நடத்தவேண்டும் இந்தியா முழுவதும் ஆண்களுக்கு சொல்லித்தாருங்கள்,” என்கிறார் ரிட்டா.
எல்லா மாநில அரசுகளும் குரல் கொடுக்கவேண்டும்
மணிப்பூரில் அங்கு நடப்பது இரண்டு இன மக்களுக்கு இடையில் நடந்த யுத்தம் போன்றது என்றபோதும் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி, ருமி மற்றும் ரிட்டா தங்களது எதிர்ப்பை தெரிவிக்க போராட்டம் நடத்த முடிவுசெய்திருந்தனர். சென்னையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் ஒன்றை ஒருங்கிணைத்த இவர்கள், எல்லா மாநில அரசுகளும் தங்களுக்காக குரல் கொடுக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
தமிழ்நாட்டில் வசிக்கும் பல மாணவர்களுக்கு மணிப்பூரில் உள்ள பெற்றோர்களால் பணம் அனுப்பமுடியவில்லை, கல்லூரி கட்டணம் செலுத்தமுடியவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். ”எங்கள் சொந்தங்களை நாங்கள் வீடியோ காலில் பார்த்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. குரலை மட்டுமே கேட்கிறோம். எல்லாம் அழுகுரல்கள்,”என்கிறார் ரிட்டா. உடலளவில் நாங்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும், உள்ளத்தளவில், மணிப்பூரில்தான் இருக்கிறோம் என உடைந்த குரலில் குமுறும் ருமி மற்றும் ரிட்டா.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.