நாகூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும் : நாகூர் தர்கா நிர்வாகம் மீண்டும் கோரிக்கை
Nagor railway station should be upgraded under Amrit Bharat scheme: Nagor Dargah administration again demands
மதுரை, பிப். 27
மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தினை துவங்கியுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் 1,000 சிறிய ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். அதாவது எஸ்கலேட்டர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதி, நடைமேடைகள் மேம்படுத்தப்படுத்துதல், 5ஜி இணையச் சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்குதல், காத்திருக்கும் அறைகள் அமைப்பு, கூடுதல் நடைமேடைகள் அமைப்பு, வாகனங்கள் நிறுத்தும் வசதி, சிசிடிவி கேமராக்கள், நுழைவு வாயில்களை புதுப்பொலிவு பெறச் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில் 508 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் என அந்த பணிகளை பிரதமர் கடந்த சில மாதங்களுக்கு முன் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 55 ரயில் நிலையங்களும், பிகார் மாநிலத்தில் 49 ரயில் நிலையங்களும், மகாராஷ்டிராவில் 44, மேற்குவங்க மாநிலத்தில் 37, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 34, அசாம் மாநிலத்தில் 32, ஒடிசா மாநிலத்தில் 25, ஆந்திரா மாநிலத்தில் 18, ஹரியானா மாநிலத்தில் 15, கர்நாடகா மாநிலத்தில் 13 ரயில் நிலையங்கள் அடங்கும்.
இதையும் படியுங்கள் : விசாகப்பட்டினத்தில் திறந்த சிறிது நேரத்தில், அலைகளால் அடித்து செல்லப்பட்ட மிதக்கும் பாலம் ; அசம்பாவிதம் தவிர்ப்பு
மேற்குறிப்பிட்ட 508 ரயில் நிலையங்களில் தமிழகத்தில் 18 ரயில் நிலையங்கள் அடங்கும். அவை, ஜோலார்பேட்டை, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, பெரம்பூர், திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிபூண்டி, அரக்கோணம், விழுப்புரம், சேலம், திருப்பூர், கரூர், போத்தனூர், நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகியன இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு ரயில் நிலையமும் அந்தந்த பகுதியின் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ள நாகூர் ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்ட பட்டியலில் சேர்க்க வேண்டும் என நாகூர் தர்கா ஆலோசனைக்குழு தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ள நாகூர் ரயில் நிலையம் முதற்கட்ட அம்ரித் பாரத் திட்ட பட்டியலில் இடம்பெறவில்லை. மிகவும் தொன்மையான நாகூர் ரயில்நிலையத்தை மேம்படுத்துதல் மிகவும் அவசியமாகிறது. இதன் மூலம் பல லட்சகணக்கான மக்கள் பயனடைவார்கள்.
உலகெங்குமிருந்து பல்லாயிரகணக்கான மக்கள் தினமும் நாகூர் வருகை புரிகிறார்கள் எனவே நாகூர் ரயில் நிலையத்து அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும் என மீண்டும் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் கோரியுள்ளார்.
மேலும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார். நாகூர் நாகப்பட்டினம் ரயில் பயனாளிகள் சங்கத்தினர் இந்த கோரிக்கைக்கு தொடர் அழுத்தம் கொடுத்து இதனை சாத்தியமாக்கி தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்