Home Blog Page 111

மத்திய பட்ஜெட் 2023-24 : வருமான வரிவிலக்கு இல்லை ; உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு இல்லை

புது டெல்லி, பிப் .1

வருமான வரி விதிப்பு தொடங்கி வட்டி இல்லா கடன் வரை பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

தனி வருமான வரி விதிப்பு தொடங்கி பொருட்களுக்கான வரி விதிப்பு வரை 2023 -24 பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன

2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பல முக்கிய அறிவிப்புகளை இன்று அவர் பட்ஜெட்டில் வெளியிட்டார்.

விவசாயிகளுக்கான அறிவிப்புகள், வருமான வரி விதிப்பு தொடங்கி வட்டி இல்லா கடன் வரை பல்வேறு முக்கிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்

3 கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும். மின்னணு நீதிமன்றங்கள் அமைக்க ரூ7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கு ரூ79,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ரயில்வே துறையை மேம்படுத்த ரூ2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சாலை கட்டமைப்புகளுக்கு ரூ70,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்

சிறு, குறு நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ9,000 கோடி கடன் வழங்கப்படும். 50 சுற்றுலா இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்படுத்தப்படும். காலாவதியான பழைய வாகனங்களை மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநில அரசுகளுக்கான வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்படும். வேளாண் கடன் இலக்கு 20 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்படும். நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
5 ஜி செயலிகளை உருவாக்க 100 ஆய்வகங்கள்; இ கோர்ட் திட்டத்துக்கு ரூ7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுவதும் 30 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் செய்யப்படும். சிறு, குறு, நடுத்த தொழில் நிறுவன ஆவணங்களைப் பாதுகாக்க டிஜிட்டல் இ லாக்கர்கள் ஒதுக்கப்படும். மாநிலங்களின் மூலதன முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கப்படும்.

100 முக்கியத்துவம் வாய்ந்த போக்குவரத்து திட்டங்கள் செயல்படுத்தப்படும். நகர்ப்புற வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்படும் ; வர்த்தகம் புரிதலை எளிமையாக்கும் வகையில் 39 ஆயிரத்திற்கும் அதிகமான நடைமுறைகள் நீக்கம். 42 புதிய சட்டங்கள் அறிமுகம் ; மூலதன முதலீடுகளுக்கான ரூ.10 லட்சம் கோடி வரை 33 சதவீதம் அதிகரிப்பு.

பசுமை எரிசக்தி மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். 63,000 வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்படும். பயோ மின் திட்டங்களுக்கு ரூ10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நாடு முழுவதும் எந்திரங்கள் மூலம் கழிவுகளை அகற்ற திட்டம் மேற்கொள்ளப்படும். தோட்ட கலைத்துறைக்கு ரூ2,200 கோடி ஒதுக்கீடு

1 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட உள்ளது. பெண்கள் 7.5% வட்டியில் ரூ2 லட்சம் வரை சேமிக்க புதிய சேமிப்பு திட்டம் தொடங்கப்படும். கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் ரூ5,300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38,000 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும். பிரதமர் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ70,000 கோடி ஒதுக்கீடு செயயப்படும்.

ஒருங்கிணைந்த வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை ஏற்படுத்தப்படும்; அரசு முகமைகளில் அனைத்து டிஜிட்டல் நடைமுறைகளில் பான் அட்டை பொதுவான அடையாளமாக ஏற்கப்படும். பான் கார்டு அடையாள ஆவணமாக மாற்ற மத்திய அரசு திட்டம். நிதி பரிவர்த்தனைக்கு பான் கார்டு கட்டாயமாக்கப்பட உள்ளது. தேசிய தரவுகள் நிர்வாகக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் ; வாடிக்கையாளரை அடையாளம் காணும் நடைமுறை KYC எளிமைப்படுத்தப்படும்.

இந்த பட்ஜெட்டில் வரி குறைக்கப்பட்ட பொருட்கள். அதனால் விலை குறையும் பொருட்கள் :- செல்போன், டிவிக்கள் உற்பத்திக்கான உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைப்பு செய்யப்படுகிறது. சைக்கிள், பொம்மைகளுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது, லித்தியம் பேட்டரி இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.டிவி பேனல்களுக்கான சுங்க வரி 2.5% குறைக்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் வரி உயர்த்தப்பட்ட பொருட்கள். அதனால் விலை உயரும் பொருட்கள்:-  தங்கம், வைர நகைகள் மீதான சுங்க வரி அதிகரிப்பு செய்யப்படுகிறது. வெள்ளி மீதான சுங்க வரி உயர்வு- வெள்ளி பொருட்கள் விலை உயருகிறது. சிகரெட்டுகள் விலை உயரும்- சிகரெட்டுகள் மீது கூடுதல் வரி விதிப்பு செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட்டுகள் மீதான இறக்குமதி வரி 16% உயர்கிறது. வருமான வரி படிவம் எளிமையாக்கப்படும்

பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் இந்த முறையும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

2023-24 மத்திய பட்ஜெட்டில் பட்ஜெட்டில் வருமான வரி சலுகை இருக்குமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இதில் பல்வேறு மாற்றங்கள் செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி – டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது 7 லட்சம் வரை இவர்கள் முறையான செலவு ஆவணங்களை கட்டி, வருமான வரி கட்டுவதில் இருந்து விலக்கை பெறலாம். இது புதிய வரி விதிப்பு முறைக்கு மட்டுமே பொருந்தும்
0 – 300000 : 0 சதவீத வரி

300000-600000 : 5 சதவீத வரி

600000 -900000 : 10 சதவீத வரி

900000 – 1200000 : 15 சதவீத வரி

1200000 -1500000 : 20சதவீத வரி

15 above : 30 சதவீத வரி

இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தை வாங்கியது அதானி குழுமம்

ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பங்கேற்றனர். ஹைஃபா துறைமுக ஒப்பந்தம் ஒரு மகத்தான மைல்கல் என்று பிரதமர் நேதன்யாகு குறிப்பிட்டார்.

 

ஹைஃபா, ஜன. 31

இஸ்ரேலிய முக்கியமான துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை அதானி குழுமம் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கி உள்ளது.

டெல் அவிவ் நகரில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தைத் திறப்பது உள்பட இஸ்ரேலில் அதிக முதலீடு செய்வதற்கான அதானி நிறுவன திட்டத்தின் ஒரு பகுதியாக, ஹைஃபா நகரத்தை வளர்ச்சி அடைய செய்ய உள்ளதாக அதானி நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

ஹைஃபா துறைமுகத்தை கையகப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய அதானி, முதலீட்டு வாய்ப்புகள் குறித்து விளக்கினார். துறைமுகத்தில் ரியல் எஸ்டேட்டை உருவாக்க உள்ளதாகவும் கூறினார்.

அண்மைய செய்திகளுக்கு www.puthiyaparimaanam.com சேனலை
காணுங்கள்

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து – 14 பேர் பலி

ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட14 பேர் பலியாகினர்.

ராஞ்சி, ஜன. 31

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் உள்ள ஜோராபடக் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதன் இரண்டாவது மாடியில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். இந்த தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட14 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகின.

கட்டடத்திற்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதால், பலி எண்ணிக்கை கூடும் என அஞ்சப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. தீவிபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி உரையுடன் பட்ஜெட் கூட்ட தொடர் தொடக்கம் ; நாளை பட்ஜெட் தாக்கல்

புதுடெல்லி, ஜன. 31

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் பாராளுமன்ற அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். அதன்படி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

கடந்த ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்முவின் முதல் கூட்டுக்கூட்ட உரை இதுவாகும். பாராளுமன்றத்தில் உரையாற்ற திரவுபதி முர்மு ஜனாதிபதி மாளிகையில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்பட்டார்.

குதிரைப்படையினர் புடை சூழ பாராளுமன்றத்துக்கு சென்றார். பாராளுமன்றத்துக்கு வந்தடைந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவை சபாநாயகர் ஓம்பிர்லா, பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்து சென்றனர்.

பாராளுமன்றத்துக்குள் ஜனாதிபதி திரவுபதி முர்மு நுழைந்ததும் எம்.பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி வரவேற்றனர். பின்னர் பாராளுமன்ற மைய மண்டபத்துக்கு திரவுபதி முர்மு சென்றார்.

இதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதன் பின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

சுதந்திரத்தில் 75-வது ஆண்டு கொண்டாடப்படும் நிலையில் உரையாற்றுகிறேன். இந்தாண்டில் தன்னிறைவு பெற்ற நாடாக நாம் தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகிறோம். 2047-ம் ஆண்டுக்குள் பொன்னான அத்தியாயங்களை கொண்ட ஒரு தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும். அதில் பழங்காலத்து பெருமையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் இருக்க வேண்டும். இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் சவால் நிறைந்ததாக இருக்கும்.

2047-ம் ஆண்டில் முழு வளர்ச்சியை காண்பதற்காக அடித்தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஏழைகள் இல்லாத புதிய இந்தியா உருவாகும். அனைத்து தரப்பினரும் நல்ல நிலையில் இருக்கும் நிலை அடுத்த 25 ஆண்டுகளில் உருவாக வேண்டும்.

வெளிநாடுகளில் ஆதரவில் இருந்த நாடு சொந்த காலில் நிற்க ஆரம்பித்துள்ளது. சுய சார்பு நாடாக மாறி உள்ளது. இந்தியா நவீன கட்டமைப்பை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. இந்தியா பொருளாதாரத்தில் 5-வது இடத்தை அடைந்திருக்கிறது.

9 ஆண்டுகளில் இந்தியாவின் மதிப்பும் மரியாதையும் கூடி உள்ளது. நிலையான, அச்சமற்ற, தீர்க்கமான அரசு பெரிய கனவுகளை நனவாக்கும் நோக்கில் செயல்படுகிறது.

சட்டப்பிரிவு 370 நீக்கம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட விஷயங்களில் அரசு தீர்க்கமாக முடிவு எடுக்கிறது. நாட்டின் இளைஞர்களும், பெண்களும் முன்னணியில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உலகின் பார்வையில் இந்தியாவின் நிலை என்பது பெருமளவில் மாறியுள்ளது. உலகின் அமைதிக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. மற்ற நாடுகள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கின்றன.

இந்தியா தனது பிரச்சினைகளை தீர்க்க பிற நாடுகளை சார்ந்திருக்காது. நாட்டின் கட்டமைப்பு வசதிகள் மிகப்பெரிய அளவில் மேம்பட்டுள்ளன. ஏழைகளுக்காகவும், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு தீவிரமாக பணியாற்றுகிறது. வறுமை இல்லாத, நடுத்தர வர்க்கம் செழிப்பாக, இளைஞர்கள் முன்னணியில் நிற்கும் இந்தியாவாக இருக்க வேண்டும்.

PRESIDENT DROUBATHI MURMU

ஜி.எஸ்.டி. மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவை இந்தியாவின் வரப்பிரசாதங்கள் ஆகும். முன்பு வரி திரும்பப்பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இன்று வருமான வரி கணக்கை தாக்கல் செய்த சில நாட்களுக்குள் பணம் திரும்ப பெறப்படுகிறது. ஜி.எஸ்.டி. மூலம் வெளிப்படைத் தன்மையுடன் வரி செலுத்துவோரின் கண்ணியமும் உறுதி செய்யப்படுகிறது.

கொரோனா காலத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசு பாதுகாப்பு அரணாக விளங்கியது. கொரோனாவை இந்தியா கையாண்ட விதத்தை பார்த்து உலகமே பாராட்டியது. கொரோனா காலத்தில் ஒரு ஏழைக்கூட பசியுடன் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். 220 கோடி கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

துல்லிய தாக்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது. இதனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இருந்து ஊழலை ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஊழல் என்பது நாட்டுக்கு அச்சுறுத்தல் என்பதால் முறைகேடு இல்லாத இலக்கை நோக்கி அரசு பயணிக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கு ஊழல் மிகப்பெரிய எதிரி என்பது அரசின் தெளிவான கருத்து ஆகும்.

கடந்த ஆண்டுகளாக ஊழலுக்கு எதிரான தொடர் போராட்டம் நடந்து வருகிறது. ஊழலை ஒழித்து பினாமி தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஊழலில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. ஊழலை ஒழித்திருக்கிறோம். குற்றமிழைத்து வெளிநாட்டுக்கு தப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம். சரியாக முடிவுகள் காரணமாக பிற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் நிலை சிறப்பாக உள்ளது.

நிலையான மற்றும் உறுதியான முடிவெடுக்கும் அரசால் நாட்டு மக்கள் பலன் பெறுகின்றனர். பழங்குடியினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் வளர்ச்சி குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. பழங்குடி பெண்கள் முன்னேற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

எந்த ஒரு பணித்துறையிலும் பெண்களுக்கு எந்த தடையும் இல்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது. இதனால் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அரசின் திட்டங்களால் பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து இடை நிற்பது குறைந்துள்ளது.

பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளோம். ஏழைகள் நலன் காக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை உலக வங்கி பாராட்டி உள்ளது. முன் மாநில மாவட்டங்கள் திட்டம் மேலும் 500 பகுதிகளுக்கு விரிவாக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் 50 கோடி பேர் அரசின் இலவச மருத்துவ சேவைகளை பெற்று வருகின்றனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் ஏழை, எளியோர் மருத்துவ வசதி பெற்று உள்ளனர். கரீப் கல்யாண் யோஜன திட்டம் மூலம் கோடிக் கணக்கான ஏழை மக்கள் தடையற்ற உணவை பெறு கின்றனர்.

2014-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் 260 மருத்துவ கல்லூரிகளை அரசு கட்டியுள்ளது. மாவட்டங்கள் தோறும் மருத்துவ கல்லூரி அமைப்பதில் முனைப்பு காட்டி வருகிறோம். புத்தாக்க தொழில்கள் எண்ணிக்கை பெரும் வளர்ச்சி பெற்று உள்ளது.

நாட்டில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன் பெண்களின் ஆரோக்கியத்திலும் மேம்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் உலக அரங்கில் நமக்கு பெருமை சேர்த்துள்ளனர். கேலோ இந்தியா திட்டம் மூலம் திறமையான விளையாட்டு வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் அரசியல் சூழல், பொருளாதாரம் நிலையாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடிமைத்தனம், காலனி ஆதிக்கத்தை நினைவூட்டம் விஷயங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. ராஜ பாதையை கடமை பாதை என பெயர் மாற்றியதன் மூலம் அடிமைத்தன விசயங்கள் மாற்றப்பட்டுள்ளன.

பிரமோஸ் ஏவுகணைகளின் வளர்ச்சி நாட்டின் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. அரசின் புதிய முயற்சிகளால் நமது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 6 மடங்கு அதிகரித்துள்ளது. ஐ.என்.எஸ். விக்ராந்த் விமான தாங்கி கப்பலை நாமே கட்டியுள்ளோம்.

தனியார் நிறுவனம் கூட செயற்கைகோளை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பசுமை வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்துகிறது. ஜி.20 உறுப்பு நாடுகளுடன் இணைந்து உலகளாவிய சவால்களுக்கு கூட்டுத் தீர்வுகளை காண இந்தியா முயற்சிக்கிறது. இவ்வாறு ஜனாதிபதி உரையில் கூறப்பட்டுள்ளது.

2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடர் இரு கூட்டங்களாக நடைபெற உள்ளது. கூட்டத்தொடரில் முதல்கட்டம் பிப்ரவரி 14-ந்தேதி வரையும், 2-வது கட்டம் மார்ச் 12-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரையும் நடைபெறும்.

பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இரு அவைகளும் 23 அமர்வுகளில் கூடவுள்ளது. இதில் 36 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ செய்தி சேனலை தவறாது பாருங்கள்.

படிப்பை தவிர வேறு வேலைகளில் ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை- பள்ளிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

டெல்லி, ஜன. 31

முதலமைச்சர் தந்தை ஸ்தானத்தில் இருந்து தான் மாணவ- மாணவிகளுக்கான திட்டங்களை கொண்டு வருகிறார். அனைத்து மாணவர்களும் விடுபடாமல் பொது தேர்வு எழுத வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம்.

தஞ்சையில் இன்று முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள். நான் மாணவர்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து தான் அவர்களுக்கான திட்டங்களை கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறுவார்.

அதில் இருந்தே அவர் எந்த அளவுக்கு மாணவர்களின் படிப்பில் அக்கறை கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. பள்ளிகளில் மாணவ-மாணவிகளை படிப்பை தவிர பள்ளியை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட வேறு எந்த வேலையிலும் ஈடுபடுத்த கூடாது.

அதனையும் மீறி ஈடுபடுத்தினால் சம்பந்தபட்ட ஆசிரியர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொது தேர்வில் மாணவர்களின் ஆப்சென்ட் விகிதம் மிக குறைவாக தான் இருக்கும்.

அனைத்து மாணவர்களும் விடுபடாமல் பொது தேர்வு எழுத வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அதேப்போல் தேர்ச்சி வீதமும் கடந்த ஆண்டை விட கூடுதலாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

 

அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ செய்தி சேனலை தவறாது பாருங்கள்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து மிட்செல் விலகல்

டெல்லி, ஜன. 31

இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என மிட்செல் ஸ்டார்க் கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 9-ந்தேதி நாக்பூரில் தொடங்குகிறது.

இந்த நிலையில் கைவிரல் காயம் காரணமாக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வருவதால் இந்தியாவுக்கு எதிரான தொடக்க டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது இந்திய சுற்றுப் பயணத்துக்கு செல்லும் ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது. இந்தியாவில் நீண்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறோம். அடுத்த இரண்டு மாதங்களில் நிறைய நல்ல கிரிக்கெட்டை பார்க்கலாம் என்றார்.

ஈரோடு இடைத்தேர்தலில் தேர்தல் மன்னன் போட்டி

 

ஈரோடு, ஜன. 31

முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். முதலில் விழிப்புணர்வுக்காக தேர்தலில் போட்டியிட்டேன். பின்னர் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் எனது நண்பர்கள் உறவினர்கள் கிண்டலடித்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தேர்தல் மன்னன் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன் (65) என்பவர் 233-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாவட்டம் மேட்டூர் எனக்கு சொந்த ஊர் ஆகும். டயர் பஞ்சர் கடை வைத்துள்ளேன். முதல் முதலாக 1988-ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டேன். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.

இதுவரை 32 எம்.பி. தேர்தல், 6 ஜனாதிபதி தேர்தல்கள், 6 துணை ஜனாதிபதி தேர்தல்கள், 72 சட்டமன்ற தேர்தல்கள், கர்நாடகாவில் 3 தேர்தல்கள், கவுன்சிலர் தேர்தல்கள் பஞ்சாயத்து யூனியன் தேர்தல்கள், பஞ்சாயத்து தலைவர் தேர்தல், வார்டு உறுப்பினர் தேர்தல், கூட்டுறவு தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டு உள்ளேன்.

இலங்கை விமானங்களுக்கு சென்னையில் இருந்து எரிபொருள்

ஆலந்தூர், ஜன.31

சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானத்தின் பெரிய ரக ஏ330 விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டு இலங்கை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஒப்பந்தம் செய்தது போல இந்த முறையும் செய்யப்பட்டு இருக்கிறது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் இலங்கையில் விமானங்களுக்கான எரி பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு விமானங்களில் நிரப்புவதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு இல்லை. இதனால் இலங்கையில் இருந்து மெல்பேர்ன், சிட்னி, டோக்கியோ போன்ற தொலைதூர நாடுகளுக்கு செல்ல விமானங்களுக்கு போதுமான எரிபொருள் இல்லாத நிலை உள்ளது.

இதனால் மீண்டும் சென்னை, திருவனந்தபுரம், கொச்சின் ஆகிய விமான நிலையங்களில் இலங்கை விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இலங்கை விமானத்தின் பெரிய ரக ஏ330 விமானத்தில் எரிபொருள் நிரப்பப்படுகிறது.

ஆளில்லாத இந்த பெரிய ரக விமானத்தில் பெட்ரோல் மட்டும் சென்னை விமான நிலையத்தில் நிரப்பப்பட்டு மீண்டும் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பெரிய ரக விமானத்தில் இருந்து மற்ற இலங்கை விமானங்களுக்கு அது பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக கடந்த ஆண்டு இலங்கை விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு ஒப்பந்தம் செய்தது போல இந்த முறையும் செய்யப்பட்டு இருக்கிறது. இலங்கையில் இருந்து அருகில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் இருந்தும் இலங்கை பெரிய ரக விமானங்கள் எரிபொருள் நிரப்பி தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்கின்றன.

பச்சை வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் – விஞ்ஞானி எபினேசர் செல்லசாமி

கொடைக்கானல், ஜன. 31

50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு பூமி சுற்று வட்ட பாதைக்கு வரும் பச்சை வால் நட்சத்திரத்தை பிப்.1  முதல் 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்க்கலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சிக்கூட விஞ்ஞானி எபினேசர் செல்லசாமி தெரிவித்தார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், கூறியதாவது: “பரந்த வான்வெளியில் சிறிய மாற்றங்களைக்கூட கண்டறியும் ஜூவிகி தொலைநோக்கி மூலம் இந்த பச்சை வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது.

இந்த வால் நட்சத்திரம் ஜன.12-ம் தேதி சூரியனை கடந்து பிப்.1  பூமிக்கு மிக அண்மையில் வரும். அதாவது, கடந்த 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடக்கிறது. இதை தொலைநோக்கியின் உதவி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும்.

இந்திய வான் இயற்பியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் இந்த வால் நட்சத்திரத்தை நிறநிரல்மானி (ஸ்பெக்ட்ரோஸ்கோப்) மூலம் ஆய்வு செய்து வருகின்றனர்.  பிப்.1-ம் தேதி காலை 4 மணி வரை இந்த நட்சத்திரத்தை பார்க்க முடியும். தொடர்ந்து, அடுத்து 4 மாதங்களும் வெவ்வேறு கால நிலைகளில் இந்த நட்சத்திரத்தை பார்க்கலாம்” என்றார்.

அண்மைச்செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ செய்தி சேனலை தவறாது பாருங்கள்.

திருப்பதி அருகே தனியார் பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து

திருப்பதி,  ஜன. 31

தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், சித்தூர் புறநகர் பகுதியான சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி யாதமரி என்ற இடத்தில் தனியார் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான கல்லா அருணகுமாரிக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில் 3000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3 ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் டியூப்ளர் பேட்டரி தயாரிக்கும் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட தொழிலாளர்கள் அங்கிருந்த தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களது முயற்சி பலனளிக்காததால் தீ வேகமாக பற்றி எரிய தொடங்கியது.

தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து சித்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் பெத்தி ரெட்டி தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்த முயன்றனர்.

சித்தூர் டிஎஸ்பி சீனிவாச மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அங்கிருந்த பேட்டரிகள் வெடித்து சிதறின. விண்ணை தொடும் அளவிற்கு புகை கிளம்பியதால் நள்ளிரவு வரை தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்பட்டது.

பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை. பல கோடி மதிப்பிலான எந்திரங்கள் மற்றும் பேட்டரிகள் எரிந்து நாசமானதாக தெரிவித்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தொழிற்சாலையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்தது தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ செய்தி சேனலை தவறாது பாருங்கள்.