ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பில் ‘மாணவர் கலை விழா’ – சுழற்கோப்பையை வென்றது மாடர்ன் மிடில் ஈஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி
‘Student Cultural Festival’: Modern Middle East International School won Riyadh Tamil Sangam Spinning Cup
குறும்படம், பாவனை நாடகம், பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டி, கிராமிய நடனம் என மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்
அதிக புள்ளிகளை ஈட்டிய, ரியாத் மாடர்ன் மிடில் ஈஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி, ரியாத் தமிழ் சங்க சுழற்கோப்பையை வென்றது
ரியாத், நவ. 15
ரியாத் தமிழ்ச் சங்கம், கடந்த 21 ஆண்டுகளாக தமிழ் வளத்திற்காகவும், தமிழர் நலத்திற்காகவும் சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் சிறப்பாக செயல்பட்டுவரும் பேரமைப்பாகும். ரியாத் தமிழ்ச் சங்கம், ஆண்டுதோறும் தமிழ் மாணவச் செல்வங்களின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் ‘மாணவர் கலைவிழா’வை நடத்தி வருகிறது.
நடப்பு 2024-2025 ஆம் ஆண்டுக்கான மாணவர் கலைவிழா ரியாத்தில் உள்ள தாருஸ்ஸலாம் இன்டர்நெஷனல் டெல்லி பப்ளிக் பள்ளிக்கூட அரங்கில் கடந்த 8-ந் தேதி சிறப்பாக நடைபெற்றது. விழாவில் குறும்படம், மைம் (பாவனை நாடகம்), பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டி, கிராமிய நடனம் என பல்சுவை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த விழாவில் பிரபல நடிகரும், தன்முனைப்பு பேச்சாளரும், மைம் கலைஞருமான மைம் கோபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வார்த்தைகளற்ற பாவனையால் நடித்து காட்டி சிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள், பிற பொதுநல அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்களும் பங்கேற்றனர். விழாவில் தமிழ் மாணவ-மாணவிகளின் திறமைகளை ஊக்கப்படுத்தும் விதமாக ரியாத் வாழ் தமிழ் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதையும் படியுங்கள்: இந்திய மாணவர்களுக்கு சர்வதேசதர உயர் கல்வி: ஸ்டடி மலேசியாவுடன் ஐ.டி.கே. கல்வி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கலைவிழாவில் பல்வேறு போட்டிகளில் அதிக புள்ளிகளை ஈட்டிய, ரியாத் மாடர்ன் மிடில் ஈஸ்ட் இன்டர்நேஷனல் பள்ளி, ரியாத் தமிழ் சங்க சுழற்கோப்பையை தட்டிச்சென்றது.
நிகழ்ச்சிக்கான ஒத்துழைப்பு மற்றும் ஆதரவு அளித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் ரியாத் தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துக்கொண்டது.
– தகவல் : ரியாத்தில் இருந்து எம். சிராஜ்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.