மாலத்தீவின் நிதி நெருக்கடிகளை சமாளிக்க இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் – முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி வலியுறுத்தல்
Talks with India to solve Maldives’ financial woes – Ex-President Ibrahim Mohamed Solih urges
-
மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன.
-
மாலத்தீவுக்கு நிதி நெருக்கடி இந்தியா கொடுத்த கடனால் உருவாகவில்லை. மாறாக, சீனா கொடுத்த கடனால்தான் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்”
மாலே, மார்ச். 25
நிதி சவால்களை சமாளிக்க தனது பிடிவாதத்தை விட்டுவிட்டு இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்ஜுவை, முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி வலியுறுத்தியுள்ளார்.
மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் ஏழாம் பொருத்தம் நீடித்து வருகிறது. இதற்கு காரணம் அதிபர் முகமது முய்ஜுவின் சீன ஆதரவு நிலைப்பாடுதான். அதிபராக பொறுப்பேற்ற பின்னர் சீனாவின் பேச்சை கேட்டு, இந்தியாவுடனான உறவை கொஞ்சம் கொஞ்சமாக முறிக்க தொடங்கியுள்ளது.
அதாவது, மாலத்தீவுக்கு இந்தியா சார்பில், டோர்னியர் 228 கடல் ரோந்து விமானம் மற்றும் இரண்டு எச்ஏஎல் துருவ் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டிருந்தன. இதனை பராமரிக்கவும், இயக்கவும் மாலத்தீவு ராணுவத்திற்கு உதவ சுமார் 70 இந்திய ராணுவ வீரர்கள் அங்கு இருக்கின்றனர். ஆனால் இவர்கள் நீண்ட காலமாக மாலத்தீவில் இருப்பது, தங்களது இறையாண்மையை பாதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்ஜு கூறியுள்ளார். எனவே இந்திய வீரர்கள் அனைவரும் மாலத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அதேபோல ‘ஹைட்ரோகிராஃபிக் சர்வே’ ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவதில்லை என்றும் மாலத்தீவு அறிவித்திருந்தது. அதாவது மாலத்தீவில் உள்ள நீர்நிலைகள், பாறைகள், கடற்கரையோரங்கள், கடல் நீரோட்டங்கள் மற்றும் அலை அளவுகள் ஆகியவற்றைப் பற்றி விரிவான ஆய்வை நடத்துவதே ‘ஹைட்ரோகிராஃபிக் சர்வே’ ஒப்பந்தமாகும்.
கடந்த 2018 முதல் இந்த ஒப்பந்தம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது மாலத்தீவு அரசு இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவதில்லை என்று கூறிவிட்டது.
இது தவிர சீனாவின் உளவு கப்பல்கள் மாலத்தீவுக்கு வந்து ஆய்வு மேற்கொள்ளவும், முய்ஜு அனுமதியளித்திருந்தார். இதையெல்லாம் செய்துவிட்டு இந்தியாவிடம் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள் : களை கட்டிய மக்களவைத் தேர்தல் ; இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்த கூட்டம்
சமீபத்தில் செய்தியாளர்களை சந்திந்த முய்ஜு, “மாலத்தீவுக்கு உதவிகள் வழங்குவதில் இந்தியா முக்கிய பங்காற்றியுள்ளது. மாலத்தீவில் ஏராளமான திட்டங்களை இந்திய அமல்படுத்தியுள்ளது. அந்த வகையில், மாலத்தீவின் நெருங்கிய கூட்டாளியாக இந்தியா தொடர்ந்து நீடிக்கும். இந்தியாவிடம் மாலத்தீவு கடன் பெற்றுள்ள நிலையில், அந்தக் கடன் சுமையை மாலத்தீவு பொருளாதாரத்தால் தாங்க முடியாது.
எனவே கடனை குறைத்தல் அல்லது கடனுக்கான வட்டி விகிதங்கள், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை திருத்தியமைத்தல் போன்ற வழிகளில் மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் அளிக்க வேண்டும். இதை இந்திய அரசு செய்யும் என்று நம்புகிறேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பிடிவாதத்தை விட்டுவிட்டு நாட்டின் நிதி நிலைமையை சமாளிக்க இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று மாலத்தீவின் முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, முய்ஜு வலியுறுத்தியுள்ளார். மேலும், “மாலத்தீவுக்கு நிதி நெருக்கடி இந்தியா கொடுத்த கடனால் உருவாகவில்லை. மாறாக, சீனா கொடுத்த கடனால்தான் ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்