Wednesday, December 18, 2024

களை கட்டிய மக்களவைத் தேர்தல் ; இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்த கூட்டம்

களை கட்டிய மக்களவைத் தேர்தல் ; இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்த கூட்டம்

Weeded Lok Sabha Elections; A crowd gathered to file nominations today

  • தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை விஐபிக்கள் படையே வேட்பாளர்களாக களமிறங்கி இருப்பதால் 16 தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றவைகளாகிவிட்டன.

  • சுயேட்சை வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நல்ல நாளான இன்று ஒரே நேரத்தில் அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் தேர்தல் அலுவலகத்தில் திருவிழா போல் கூட்டம் களை கட்டியது

சென்னை, மார்ச். 25

களை கட்டிய மக்களவைத் தேர்தல் ; இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்த கூட்டம்: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை விஐபிக்கள் படையே வேட்பாளர்களாக களமிறங்கி இருப்பதால் 16 தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றவைகளாகிவிட்டன.

திருவள்ளூர் (தனி) லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மாஜி ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் களமிறக்கப்பட்டுள்ளார். கர்நாடகாவில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய போது 2019-ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்கு வந்தவர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற காரணமான வியூக வகுப்பாளர்களில் ஒருவர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கும் சசிகாந்த் செந்தில் பெயர் அடிபட்டது. காங்கிரஸ் மேலிடத்தின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரான சசிகாந்த் திருவள்ளூர் தொகுதியில் களம் காண்கிறார்.

தென்சென்னை லோக்சபா தொகுதியில் தெலுங்கானா ஆளுநராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த போது தமிழிசை முழங்கும், தாமரை மலர்ந்தே தீரும் என்ற முழக்கம் பேசுபொருளாக இருந்தது. புதுச்சேரி ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார். தேர்தல்களில் தோல்வியை, வெற்றிகரமான தோல்வி என குறிப்பிட்டு தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தவர். 2019 லோக்சபா தேர்தலில் தூத்துக்குடியில் திமுகவின் கனிமொழியிடம் தோல்வியைத் தழுவியவர். தற்போது தென் சென்னையில் திமுக சிட்டிங் எம்பி தமிழச்சி தங்கபாண்டியனுடன் மோதுகிறார். மூத்த திமுக தலைவர்களில் ஒருவரான தங்கபாண்டியன் மகள் தமிழச்சி தங்கபாண்டியன். தற்போதைய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியும் ஆவார். இவர்களுடன் அதிமுக மூத்த தலைவரான ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் களத்தில் நிற்கிறார்.

இதையும் படியுங்கள் : தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (மார்ச் 26) தொடக்கம் ; மாணவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

விழுப்புரம் லோக்சபா தொகுதியில் விசிகவின் சிட்டிங் எம்பி ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் நிறுத்தப்பட்டுள்ளார். பூமணி, முந்திரிக்காடு உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். தாம் நடத்தி வந்த தமிழர் நல பேரியக்கத்தை நாம் தமிழர் கட்சியுடன் இணைத்துவிட்டு தற்போது அக்கட்சியின் விழுப்புரம் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார்.

கடலூர் லோக்சபா தொகுதியில் மற்றொரு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், பாமகவின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது. வட தமிழ்நாட்டு வாழ்வியலை தமது திரைப் படங்களிலும் எழுத்துகளிலும் விவரித்தவர் தங்கர்பச்சான். தேர்தல் அரசியலுக்குப் புதியவர்.

சிதம்பரம் லோக்சபா தொகுதியில் மீண்டும் களம் காண்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வாகை சூடியவர் தொல்.திருமாவளவன்.

பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார்.

பாஜக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவரான சிட்டிங் எம்பி பாரிவேந்தர் மீண்டும் களம் காண்கிறார். கடந்த தேர்தலில் பாரிவேந்தர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர். திருச்சி லோக்சபா தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும் மதிமுக முதன்மை செயலாளருமான துரைவைகோ போட்டியிடுகிறார். துரை வைகோ சந்திக்கும் முதல் தேர்தல் இது. மதிமுக தனிச் சின்னத்தில்தான் இத்தொகுதியில் போட்டியிடுகிறது.

2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மதிமுக அவைத்தலைவராக இருந்த எல்.கணேசன் வென்றார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர் வென்ற தொகுதி இது.

தருமபுரி (தர்மபுரி) லோக்சபா தொகுதியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மருமகள்- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது தந்தை கிருஷ்ணசாமி, மூத்த காங்கிரஸ் தலைவர்.

இவரது சகோதரர் டாக்டர் விஷ்ணு பிரசாத், கடலூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர். 2014-ம் ஆண்டு தருமபுரி லோக்சபா தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றிருந்தார். இம்முறை முதலில் அரசாங்கம் என்பவர் பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். பின்னர் சவுமியா அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி விஐபி தொகுதியாவதற்கு காரணம் இளம் பெண் வித்யா வீரப்பன். சந்தனக் கடத்தல் மன்னனாக திகழ்ந்த, அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட வீரப்பன் மகள்தான் வித்யா. பாஜகவில் இருந்த வித்யா வீரப்பன் தற்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளராக களம் காண்கிறார். கோவை லோக்சபா தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி பின்னர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தவர்.

சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியவர். லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்த நிலையில் கோவை வேட்பாளராக அண்ணாமலை நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் இங்கு களம் காண்கிறார். திமுக வேட்பாளராக முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார். நீலகிரி லோக்சபா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான ஆ.ராசா மீண்டும் போட்டியிடுகிறார்.

அவருக்கு எதிராக அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான தனபால் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் களம் காண்கிறார். பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் எல்.முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். ராஜ்யசபா எம்பியாக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவர் எல்.முருகன். தேனி லோக்சபா தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார்.

முன்னர் பெரியகுளம் லோக்சபா தொகுதியாக இருந்த போது அதிமுக எம்பியாக வென்றவர். கடந்த தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் இத்தொகுதி அதிமுக எம்பியாக வென்றவர். டிடிவி தினகரனுக்கு எதிராக அமமுகவில் முன்னர் பணியாற்றி பின் திமுகவுக்கு போன தங்க தமிழ்ச்செல்வன் களம் காண்கிறார்.

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். கட்சி, சின்னம், தொண்டர்கள் எந்த ஒரு பலமும் இல்லாமல் வேறுவழியே இல்லாமல் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார் ஓபிஎஸ்.

விருதுநகர் லோக்சபா தொகுதி விஐபி தொகுதியாக காரணம் நடிகை ராதிகா சரத்குமார், விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன். பாஜக வேட்பாளராக நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவின் வேட்பாளராக விஜய பிரபாகர் என்ற விஜய பிரபாகரன் களம் காண்கிறார்.

சிட்டிங் எம்பியான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் மீண்டும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் சிட்டிங் எம்பி கனிமொழி கருணாநிதி மீண்டும் களம் காண்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதியின் மகள். தற்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சகோதரி.

கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு இத்தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் வென்றார். 2019-ல் காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் வெற்றி பெற்றார். அவரது திடீர் மறைவால் இடைத்தேர்தலை சந்தித்த கன்னியாகுமரி தொகுதி எம்பியாக வென்றவர் வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த்.

ஒவ்வொரு வேட்பாளர்களும் மனுதாக்கல் செய்த போது அவர்களுடன் மாவட்டச் செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் வந்திருந்தனர். இவர்களுடன் கட்சி நிர்வாகிகள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வேட்பு மனு தாக்கலுக்கு வந்தனர்.

ஆனால் அவர்கள் அனைவரும் தேர்தல் அலுவலகத்துக்கு செல்ல அனுமதி கிடையாது என்பதால் 100 மீட்டருக்கு அப்பால் நிறுத்தப்பட்டனர். இதேபோல் சுயேட்சை வேட்பாளர்களும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். நல்ல நாளான இன்று ஒரே நேரத்தில் அரசியல் கட்சியினரும் சுயேட்சைகளும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால் தேர்தல் அலுவலகத்தில் திருவிழா போல் கூட்டம் களை கட்டியது.

ஒவ்வொரு வேட்பாளர்களும் மற்ற வேட்பாளர்களை சந்தித்து கொண்டபோது மகிழ்ச்சியுடன் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles