நாதக நிர்வாகிகள் கார்த்திகாவையும், அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நாதக நிர்வாகிகள் கார்த்திகாவையும், அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 

Release NTK office-bearer Karthika and her party members unconditionally – DMK President M.K. Stalin 

  • ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும்

  • இடைத்தேர்தலில் தவெக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நாதக நிர்வாகிகளைக் கைது

சென்னை, அக். 20

நாதக நிர்வாகிகள் கார்த்திகாவையும், அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பாஜக, இன்னொன்று தமிழ்நாட்டில் தவெக. நாதக நிர்வாகிகள் கார்த்திகாவையும், அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை தவெக அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் கார்த்திகா திமுகவையும், அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை.

ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாக தவெக அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் தவெக அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நாதக நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும்.
ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். தவெகவின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது.

நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் தவெக அரசு ஈடுபடுகிறது.

மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் தவெகவில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள்.

குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பாஜக., இன்னொன்று தமிழ்நாட்டில் தவெக. உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. கார்த்திகாவையும், அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட கார்த்திகா உட்பட அக்கட்சியின் நிர்வாகிகள் 6 பேர் கைது – எதிர்க்கட்சியினர் மீதான தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி கார்த்திகா, அவரது கணவர் உட்பட அக்கட்சியைச் சார்ந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, முதல்வர் விஜய் செல்லும் வழியில் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதற்காகத் கார்த்திகா மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளைக் காவல்துறையை ஏவிக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கும் தவெக அரசின் பழிவாங்கல் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

 

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்த வேண்டிய காவல்துறையை, எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் எண்ணத்தோடு அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.

எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்புமிக்க காவல்துறையைத் தனது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகப் பயன்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்திடுவதோடு, கார்த்திகா உட்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அனைவரின் மீதான கைது நடவடிக்கையையும் உடனடியாகக் கைவிட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles