காவிரியில் வெள்ளப்பெருக்கு ; மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு
Cauvery river flood ; Increase in flow to mettur dam
- கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
- காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 17.48 அடியாகவும், நீர் இருப்பு 11.53 டிஎம்சியாகவும் உயர்வு
மேட்டூர், ஜூலை. 20
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 53,098 கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 4 நாளில் நீர்மட்டம் 17.48 அடி உயர்ந்து, இன்று காலை 61.31 அடியை எட்டியது.
கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து நேற்று காலை 40,018 கன அடியாக இருந்தது.
இந்நிலையில் நீர்வரத்து, இன்று (ஜூலை 20) காலை 53,098 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து, காவிரி கரையோர மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட, நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
அணையின் நீர்மட்டம் நேற்று காலை 55.12 அடியில் இருந்த நிலையில் இன்று காலை 61.31 அடியாகவும், நீர் இருப்பு 21.18 டிஎம்சியில் இருந்து 25.67 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது.
காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 நாளில் 17.48 அடியாகவும், நீர் இருப்பு 11.53 டிஎம்சியாகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரத்தை கடந்து வந்து கொண்டிப்பதால், நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என நீர்வளத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்