அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க தடை – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் வசூலிக்க தடை – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Ban on Collecting Question Paper Fees in Government and Government-Aided Schools – School Education Department Issues Order

  • அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணமாக ஓராண்டுக்கு ரூ.300 முதல் 500 வரை வசூல் செய்யப்பட்டதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

சென்னை, நவ. 03

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் கரூரைச் சேர்ந்த மலைக்கொளுந்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘‘நடப்பு கல்வியாண்டு (2026–27) முதல் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்வதாக தமிழக அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது.

ஆனால் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட ஆவணங்களின்படி மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது. தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடம் இருந்து அங்கீகரிக்கப்படாத வினாத்தாள் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்களிடம் இருந்து வினாத்தாள் அல்லது பிற சட்டவிரோத கட்டணங்களை வசூலிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த அக்டோபர் 23-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலர் மற்றும் அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யவும், லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பள்ளிகளில் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் இயங்கும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வினாத்தாள் கட்டணம் வசூல் செய்வதற்கு தடை விதித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் என்.லதா, அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்புவரையில் படிக்கும் மாணவ,மாணவிகளிடம் தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டணம் மற்றும் எந்தவித முறையற்ற கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது. இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணமாக ஓராண்டுக்கு ரூ.300 முதல் 500 வரை வசூல் செய்யப்பட்டதாக ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  https://puthiyaparimaanam.com/  மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.

Related Articles

Stay Connected

0FansLike
3,849FollowersFollow
22,900SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles