புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்
Tamil Nadu Chief Minister Joseph Vijay Inaugurates New Bus Stand in Pudukkottai
-
கட்டியாவயல் பகுதியிலிருந்து ரோடு ஷோ மூலம் ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்த அவர், அங்குள்ள கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் ரூ.68.31 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட 44 முடிவுற்ற புதிய திட்டங்களைத் திறந்து வைத்தார்
புதுக்கோட்டை, நவ. 02
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் திறந்து வைத்தார் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்: புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற அரசு விழாவில், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 13,676 பேருக்கு சுமார் ரூ.62.73 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகப் புதுக்கோட்டைக்கு முதல்வர் விஜய் வருகை தந்தார்.
கட்டியாவயல் பகுதியிலிருந்து ரோடு ஷோ மூலம் ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்த அவர், அங்குள்ள கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில் ரூ.68.31 கோடி மதிப்பில் உள்விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட 44 முடிவுற்ற புதிய திட்டங்களைத் திறந்து வைத்தார்.
ரூ.11.72 கோடி மதிப்பில் 70 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 13,676 பயனாளிகளுக்கு ரூ.62.73 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
மேலும், நலத் திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய், மாற்றுத் திறனாளிகளிடம் நேரடியாகச் சென்று நலத் திட்ட உதவிகளை வழங்கியதுடன், ஒரு பெண்ணுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அதன்பிறகு, அலுவலக வளாகத்தில் நடந்து சென்று அங்கு திரண்டிருந்த அரசு ஊழியர்களை நோக்கிக் கையசைத்தார்.
பின்னர் காரில் ஏறி, ரோடு ஷோ மூலம் புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்று, ரூ.23.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையக் கல்வெட்டைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, ரோடு ஷோ மூலம் விருந்தினர் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுத்த அவர், மாலை 3 மணியளவில் சாலை மார்க்கமாக மீண்டும் திருச்சி விமான நிலையம் சென்று, தனி விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இந்த அரசு விழாவில், மாநில நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்த், மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜெ.முகமது பர்வேஸ், எம்பிகள் துரை வைகோ, நவாஸ்கனி, ஜோதிமணி, எம்எல்ஏ என்.சுப்பிரமணியன், ஆட்சியர் எம்.அருணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முதல்வர் விஜய்க்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருச்சி – காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை வழியாகப் புதுக்கோட்டை வரை பல்வேறு இடங்களில் தவெக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அருகே முதல்வரை வரவேற்பதற்காக வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்த 3 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். மயங்கியவர்களை போலீஸாரே தூக்கிச் சென்று நிழலில் அமர வைத்தனர். மேலும், வெயிலில் காத்திருந்த பொதுமக்களுக்குப் போலீஸார் குடிநீர் வழங்கினர்.
முதல்வருக்குக் கருப்பு கொடி காட்டத் திட்டமிட்டிருந்த தேமுதிக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மற்றும் மாநகர செயலாளர் பரமஜோதி ஆகியோரை, அக்கட்சி அலுவலகத்திலேயே போலீஸார் காவலில் வைத்தனர். அதேபோல, முதல்வரிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்திருந்த புதுக்கோட்டை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட கே.எம்.சரீப்பை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்துவது என முதலில் திட்டமிடப்பட்டது. இதற்காக அங்குப் பிரம்மாண்ட பந்தல் மற்றும் சுமார் 2,000 பேர் அமர்வதற்கான இருக்கை வசதிகள் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி அங்கு விழாவை நடத்த வேண்டாம் என உளவுத்துறையினர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அந்த இடம் கைவிடப்பட்டு, ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்குக்கு விழா கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது.

பேருந்து நிலையம் கட்டுமானப் பணியின்போது ஒரு தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டது. பேருந்து நிலையம் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிக்காக வேறு இடத்துக்கு தற்காலிக பேருந்து நிலையம் மாற்றப்பட்டது.திறப்பு விழாவுக்காக வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் முன்னறிவிப்பு செய்யாததாலும், பேருந்து நிலையம் திறந்தவுடன் அங்கிருந்து பேருந்துகளை இயக்காததாலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடக்குமா, நடக்காதா என முன்னறிவிப்பு செய்யவில்லை என சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஓர் அறையில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அலுவலர்கள் அமர்ந்திருந்த நிலையில், போலீஸாரின் கெடுபிடியினால் பொதுமக்கள் திரும்பிச் சென்றனர்.
சுவாரஸ்யமான அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ மற்றும் https://youtube.com/@puthiyaparimaanamtv?si=knGTQja4kr5TtZaY சேனலை பாருங்கள்.






