பிஎஸ்சி நர்சிங், எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணை; இந்திய நர்சிங் கவுன்சில் வெளியிட்டதாக கூறும் சுற்றறிக்கை போலி – மத்திய சுகாதாரத்துறை
indian nursing council issued bsc nursing is equal to mbbs ; this circular is fake – union health department
-
நர்சிங் முடித்த செவிலியர்கள் அனைவரும் டாக்டர்களுக்கு நிகராக ஜூனியர் டாக்டர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
-
இந்திய நர்சிங் கவுன்சில் வெளியிட்டதாக கூறும் சுற்றறிக்கை போலி
டெல்லி, ஜூன் 09
இந்தியாவில் நர்சிங் படிப்பானது மருத்துவப் படிப்புக்கு (எம்.பி.பி.எஸ்.) சமம் என்றும், நர்சிங் முடித்த செவிலியர்கள் அனைவரும் டாக்டர்களுக்கு நிகராக ஜூனியர் டாக்டர்கள் என அழைக்கப்படுவார்கள் என்றும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
சுற்றறிக்கை
இது தொடர்பாக மத்திய அரசு அனுப்பியிருப்பதாக கூறி ஒரு சுற்றறிக்கை மற்றும் நியூஸ் கார்டு போன்ற இமேஜ் வைரலாகி வருகிறது. இந்த தகவல் தொடர்பான உண்மைத்தன்மையை கூகுள் மூலம் தேடும்போது, அதுபோன்ற எந்த செய்தியும் நம்பகமான ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படவில்லை.
இந்திய நர்சிங் கவுன்சில்
இந்திய நர்சிங் கவுன்சில் இணையதளத்திலும் அப்படி ஒரு அறிக்கையோ சுற்றிக்கையோ வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக மேலும் தேடுகையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் துருவ் சவுகான் நேற்று முன்தினம் தனது டுவிட்டர் பதிவில், இந்த சுற்றறிக்கை போலியானது என குறிப்பிட்டிருந்தார்.
மத்திய சுகாதாரத்துறை
மத்திய சுகாதாரத்துறையும் நேற்று இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், “செவிலியர்கள் நர்சிங் அதிகாரிகள் என்று அழைக்கப்படுவார்கள் என்றும், பிஎஸ்சி நர்சிங் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இணையானதாகக் கருதப்படும் என்றும் இந்திய நர்சிங் கவுன்சில் வெளியிட்டதாக கூறும் சுற்றறிக்கை போலியானது. இதனை மேற்கொண்டு யாரும் பரப்ப வேண்டாம்” என தெளிவாக கூறப்பட்டிருந்தது.
பத்திரிகை தகவல் மையம்
பத்திரிகை தகவல் மையத்தின் (பிஐபி) உண்மை சரிபார்ப்பு பிரிவும் தனது டுவிட்டர் பக்கத்தில் இதே கருத்தை பதிவிட்டிருந்தது.
போலி சுற்றறிக்கை
எனவே, வைரலாக பரவும் சுற்றறிக்கை போலி என்பதும், நர்சிங் கவுன்சில் அப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிடவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்.