Home Blog Page 110

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோவில்களுக்கு ரூ.3 கோடி நிதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 

  • கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான அரசு மானியத்தை ரூ. 3 கோடியில் இருந்து ரூ. 6 கோடியாக உயர்த்தி அதற்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

  • புதுக்கோட்டை தேவஸ்தான கோவில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான அரசு மானியத்தை  ரூ. 1 கோடியில் இருந்து ரூ.3 கோடியாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை வழங்கினார்.

சென்னை, பிப். 04

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தில் 88 ஒருங்கிணைந்த கோவில்களின் நிர்வாகமானது பரம்பரை அறங்காவலர், உதவி ஆணையர் / பொருளாளர் மற்றும் மேலாளரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

தேவஸ்தானத்துடன் இணைந்துள்ள 88 கோவில்களில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், தாராசுரம், ஐராவதீஸ்வரர் கோவில், முக்கிய பிரார்த்தனை தலமாக விளங்கும் புன்னைநல்லூர், மாரியம்மன் கோவில் மற்றும் வைணவ 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தஞ்சை மாமணிகோவில் எனப்படும் வெண்ணாற்றங்கரை, மேல சிங்கபெருமாள் கோவில், மணிகுன்ற பெருமாள் கோவில் மற்றும் நீலமேகப் பெருமாள் கோவில் ஆகிய முக்கிய கோவில்கள் உள்ளன.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட கோவில்களில் பெரும்பாலும் குறைந்த வருவாய் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. முதன்மையாக வருவாய் வரப்பெறும் தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் புன்னைநல்லூர், மாரியம்மன் கோவில்களின் வருவாயை கொண்டே இதர கோவில்களின் நிர்வாகம் நிதி பற்றாக்குறையுடன் தற்போது மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்: ஈரோடு இடைத்தேர்தல்: விதவை கோலத்தில் மனுதாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்

இந்நிதி பற்றாக்குறையை போக்கிடும் வகையில் அரசு மானியமாக ஆண்டுதோறும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 27.12.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான அரசு மானியத்தை 3 கோடி ரூபாயில் இருந்து 6 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தான கோவில்களின் நிர்வாக மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான அரசு மானியத்தை 1 கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாகவும் உயர்த்தி அதற்கான காசோலைகளை வழங்கி உள்ளார்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் ரா.கண்ணன், ந.திருமகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

நித்யானந்தாவுக்கு புளூகார்னர் நோட்டீஸ் : குஜராத் அறிவிப்புக்கு சர்வதேச போலீஸ் மறுப்பு

* கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை நித்யானந்தா அறிமுகப்படுத்தி உள்ளார்.

* நித்யானந்தா தொடர்ந்து ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

புதுடெல்லி, பிப். 04

கர்நாடகா, குஜராத்தில் உள்ள வழக்குகள் காரணமாக வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய சாமியார் நித்யானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வருகிறார்.

அவர் கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் கைலாசா நாட்டுக்கு என தனி கொடி, பாஸ்போர்ட், ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து நித்யானந்தாவை பிடிப்பதற்காக குஜராத் போலீசார், சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியை நாடி உள்ளதாக தகவல்கள் வெளியானது.

மேலும் இன்டர்போல் மூலமாக புளூகார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு நித்யானந்தாவை தேடும் பணி நடைபெற்று வருவதாக குஜராத் போலீசார் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நித்யானந்தாவின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. ஆனாலும் நித்யானந்தா தொடர்ந்து ஆன்லைன் மூலம் பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வந்தார்.

அவர் எங்கிருந்து இந்த வீடியோக்களை வெளியிடுகிறார் என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே நித்யானந்தாவை கண்டு பிடிப்பதற்காக புளூகார்னர் நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என இன்டர்போல் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக இன்டர்போலின் தலைமை செயலகத்தில் இருந்து 2 கடிதங்கள் வெளியாகி உள்ளது. அதில் நித்யானந்தாவுக்கு எதிராக எந்த நோட்டீஸ் அல்லது பிடிவாரண்டு எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கவில்லை என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது நித்யானந்தா வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

அமெரிக்க பென்டகன் மீது ரகசிய பலூன் : உளவு பார்க்கவில்லை சீனா மறுப்பு

 

  • அமெரிக்க வான்பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல.

  • அமெரிக்கா மீது பறந்து கொண்டிருக்கும் பலூன் எங்களுடையதுதான். அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல்-சீனா விளக்கம்

பீஜிங், பிப். 04

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்தது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது. அந்த பலூனை சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்பட்டது.

ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏதாவது ஏற்பட்டு விடலாம் என்று கருதி அந்த முடிவை கைவிட்டனர். ஏற்கனவே அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் உளவு பலூன் பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அமெரிக்க வான்பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல என்றும், அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு விவகார அமைச்சகம் கூறியதாவது:- அமெரிக்கா மீது பறந்து கொண்டிருக்கும் பலூன் எங்களுடையதுதான். அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல். அது ராணுவ பயன்பாட்டுக்கானதல்ல.

பொதுமக்கள் பயன்பாட்டுக்கானதாகும். மேற்கில் இருந்து வீசிய காற்று மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையால், ஆகாய கப்பல் திசை மாறி சென்று விட்டது. அது அமெரிக்க வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபற்றி அமெரிக்க தரப்புடன் தொடர்பு கொண்டு விளக்குவோம் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா வான் பரப்பில் பறந்தது ஆகாய கப்பல்தான் என்று சீனா அளித்துள்ள விளக்கத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் ஏற்க மறுத்து விட்டது.

இதுகுறித்து பென்டகனின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் பேட் டைரடர் கூறும்போது, “சீன அரசின் விளக்கம் பற்றி அறிந்தோம். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஒரு உளவு பலூன் என்பது எங்களுக்கு தெரியும்.

அது அமெரிக்க வான்வெளி மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபற்றி சீன அரசிடம் தூதரக ரீதியிலும் மற்றும் பல்வேறு மட்டங்களிலும் நேரடியாகவே தெரிவித்து விட்டோம்” என்றார்.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

தமிழ்நாடு தன்னுரிமை கழகம்: புதிய கட்சி தொடங்குகிறார் பழ. கருப்பையா

  • கட்சி கொடி பச்சை நிறத்தில் தமிழ்நாடு நிலப்படம் மற்றும் காந்தி உருவத்துடன் இருக்கும்.

  • தற்போது பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிப்பதும் ஆட்சிக்கு வந்த உடன் பணத்தை சம்பாதிப்பதும் தான் 50 ஆண்டு அரசியல் களமாக உள்ளது.

  • முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு விசாரிப்பது போல் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு விசாரிக்க வேண்டும்.

சென்னை, பிப் .03

நடிகர் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் தமிழ்நாடு முதல்வராக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா புதிய கட்சியை துவங்கி உள்ளார். தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியை துவங்குவதாக அவர் அறிவித்துள்ள நிலையில் நாளை மறுநாள் கட்சியின் கொடி, கொள்கை ஆகிய விவரங்களை வெளியிட்டு மாநாடு நடத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பழ கருப்பையா. எழுத்தாளர், நடிகர், சினிமா தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர். அதிமுக, திமுகவில் செயல்பட்டு வந்த இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் சேர்ந்து செயல்பட்டார்.

சமீபகாலமாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் அவர் செயல்படாமல் இருந்தது. இதுபற்றி கேட்டபோது நான் கட்சியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்தார். இதையடுத்து கடந்த சில மாதங்களாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் பழ கருப்பையா இருந்தார்.

இந்நிலையில் தான் தற்போது அவர் புதிய கட்சியை துவங்குவதாக அறிவித்துள்ளார். தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். இவர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் பல கருப்பையா பேட்டியளித்தார். அப்போது அவர் புதிய கட்சியை தொடங்குவதாக தெரிவித்தார். இதுபற்றி பழகருப்பையா கூறியதாவது:

தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியினை துவங்க உள்ளேன். இதற்கான மாநாடு பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். கட்சியின் கொள்கை, நேர்மை, காந்தியம், தமிழ் தேசியம் எனவும் கட்சி கொடியும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கட்சி கொடி பச்சை நிறத்தில் தமிழ்நாடு நிலப்படம் மற்றும் காந்தி உருவத்துடன் இருக்கும். தற்போது பணத்தை வைத்து ஆட்சியைப் பிடிப்பதும் ஆட்சிக்கு வந்த உடன் பணத்தை சம்பாதிப்பதும் தான் 50 ஆண்டு அரசியல் களமாக உள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான ஊழல் வழக்கு விசாரிப்பது போல் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான ஊழல் வழக்கு விசாரிக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் ஆதாரங்களை பணம் கொடுத்து கலைப்பதாகவும், திருடன் கொள்ளையடித்த பொருளை அதே இடத்தில் வைத்து விட்டால் தண்டனைக்கு தப்பிக்கலாம் என்பது போல் அவர் நடந்து கொண்டுள்ளார்.

ஹிந்து என்றது விந்திய மாலைக்கு அப்பாற்பட்டு இருந்த இடத்திலிருந்து வந்தது. தமிழர்களுடைய கலாச்சாரம் வேறு, பண்பாடு வேறு. இங்கு சிறு தெய்வம், குலதெய்வம் வழிபாடு தான். மதத்தின் பெயரை வைத்து பாஜக பிரித்தால், அது சூழ்ச்சியில் ஈடுபடுவதாகும். நான் பாஜக, திமுகவை எதிர்த்து அரசியல் கட்சி துவங்கி உள்ளேன். திமுகவுக்கு அடிபணிந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன” என்றார்.

பழ கருப்பையா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அங்காடித்தெரு படத்தில் அண்ணாச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கவனத்தையும் பெற்றார். அதன்பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக வில்லன் கேரக்டரில் நடித்து கவனம் பெற்றார். இதுதவிர மேலும் சில படங்களிலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்.

ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் என்ன வேண்டுமானாலும் கூறலாமா?- சி.டி.ரவிக்கு சிங்கை ஜி.ராமசச்சந்திரன் பதிலடி

அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணையவேண்டும் என்று சி.டி.ரவி கூறியிருந்தார் கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா?

சென்னை, பிப். 03

ஈரோடு இடைத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்த விஷயத்தில் பாஜக சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அவ்வகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை பாஜக மேலிடப்பொறுப்பாளர் சி.டி.ரவி தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் தனித்தனியே சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சி.டி.ரவி கூறியதாவது:-

1972-ல் அதிமுக உருவானபோது எம்.ஜி.ஆர். திமுகவை தீய சக்தி என்று அழைத்தார். அவரது கருத்து 2023-ம் ஆண்டும் மாறவில்லை. தான் உயிருடன் இருந்தவரை ‘அம்மாவும்’ திமுகவை தீயசக்தி என்று அழைத்தார். மக்களிடம் முக ஸ்டாலின் அரசின் பிரபலம் குறைந்துவரும் சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

திமுக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை மிகப்பெரிய அளவில் உள்ளது. திமுக ஒரு குடும்பத்திற்காக உழைத்து வருகிறது. தமிழ் மக்களுக்கு எதிராக உள்ளது. தமிழ் மக்களுக்கு எதிரான கட்சி திமுக. மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, பால் உள்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, திமுக மந்திரிகள், எம்.பி.க்களால், மூத்த தலைவர்களால் தமிழ் கலாச்சாரம் மீது தொடர் தாக்குதல் நடைபெறுகிறது.

ஆகையால் தான் இந்த தீய சக்தியை இடைத்தேர்தலில் தோற்கடிக்க ஒன்றுபட்ட தேசிய ஜனநாயக கூட்டணி, ஒன்றுபட்ட அதிமுக கட்டாயம் தேவை. இவ்வாறு அவர் கூறினார். அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணையவேண்டும் என்று கூறிய சி.டி.ரவியின் கருத்தை அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ஜி.ராமசச்சந்திரன் கடுமையாக சாடி உள்ளார்.

சி,டி.ரவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- எங்கள் கட்சியில் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு சி.டி.ரவி யார்? நீங்கள் ஒரு தேசியக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் என்ன வேண்டுமானாலும் கூறலாமா? இதேபோல் கர்நாடக பாஜகவை எப்படி நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறினால் ஏற்றுக்கொள்வீர்களா? திமுகவை எதிர்த்து ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத நீங்கள் எங்களுக்கு அறிவுரை கூறுவதா? இவ்வாறு சிங்கை ஜி.ராமசச்சந்திரன் கூறி உள்ளார்.

சலங்கை ஒலி” இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்

சென்னை, பிப். 03

இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக காலமானார். கமல்ஹாசன் நடிப்பில் உருவான சலங்கை ஒலி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் மாற்று சினிமா எடுக்கும் முன்னோடி இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் கே.விஸ்வநாத் வயது முதிர்வு காரணமாக காலமானார். 92 வயதான கே.விஸ்வநாத், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

இவர் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். கலா தபஸ்வி என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் கே.விஸ்வநாத். இவர் 1930ம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்தவர்.

இவர் கடந்த 1957-ல் சென்னையில் தனது திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். ஒலிப்பதிவாளராக சினிமாவில் தடம்பதித்த இவர், 1975ல் முதன்முறையாக ஆத்ம கவுரவம் என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கினார். இதற்காக கே.விஸ்வநாத்திற்கு நந்தி விருது வழங்கப்பட்டது.

அதன் பின்னர் இவர் சிரிசிரி முவ்வா, சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட பல தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களை இயக்கினார். 50 படங்களுக்கு மேல் இயக்கிய விஸ்வநாத், ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

அஜித்குமார் நடித்த முகவரி, விக்ரம் நடித்த ராஜபாட்டை, சூர்யா நடித்த சிங்கம் 2, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, கமல்ஹாசனுடன் உத்தம வில்லன், குருதிப்புனல், ரஜினிகாந்த் உடன் லிங்கா உள்ளிட்ட ஏராளனான படங்களில் தமிழில் நடித்திருக்கிறார்.

இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான தாதாசாகேப் பால்கே விருதை பெற்றுள்ளார். அதேபோல் இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 5 தேசிய விருதுகள், ஆந்திர அரசின் ஏழு நந்திவிருதுகள், 10 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், ஒரு இந்தி பிலிம்பேர் விருது என ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிறார்.

சமீபகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் கே.விஸ்வநாத் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அண்மையில் கூட நடிகர் கமல்ஹாசன் இவரை நேரில் சந்தித்த நலம் விசாரித்ததோடு, அவரிடம் ஆசிர்வாதம் பெற்று கொண்டார்.

இவரின் மறைவு தென்னிந்திய திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா சினிமாவின் முக்கிய ஜாம்பவான்களில் ஒருவரான கே.விஸ்வநாத் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

அண்மை செய்திகளை காண https://puthiyaparimaanam.com/ சேனலை காணுங்கள்..

புவிசார் குறியீடு : நாட்டுச்சர்க்கரை, சித்திரைகார் நெல், கண்ணாடி கத்திரி விண்ணப்பம்

 

ஈரோடு கவுந்தபாடி பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாட்டுச்சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணிப் பகுதிகளில் சித்திரைகார் நெல்வகை சாகுபடி செய்யப்படுகிறது.

 

சென்னை, பிப் . 03

உலகில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் பாரம்பரியப் பண்புகள், தனித்த அடையாளங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு டார்ஜிலிங் தேநீர், மைசூர் பட்டு, தமிழகத்தின் தஞ்சாவூர் ஓவியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.

இவற்றை பிற பகுதியினர் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டது.

உலக வர்த்தக மையத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்லாது, உலக அளவில் பொருட்களுக்கு இங்கு விண்ணப்பித்து புவிசார் குறியீடு பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் கீழ் செயல்படும் இதற்கான அலுவலகத்தின் தலைமையகம் சென்னை கிண்டியில் இருக்கிறது.

இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பொருளுக்கான உரிமை மற்றும் தொழில் பாதுகாப்பை பெற முடியும். டெல்லியிலோ அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியிலோ ஒரு பட்டுப் புடவையை நெய்து, அதனை ‘காஞ்சிப் பட்டு’ என்று விற்க முடியாது.

தமிழகத்தில் , மதுரை மல்லி, காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கும்பகோணம் வெற்றிலை, கொடைக்கானல் வெள்ளைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் என ஏராளமான பொருட்களுக்கு ‘புவிசார் குறியீடு’ கிடைத்துள்ளது.

தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பாக கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை, ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி மற்றும் சேலம் கண்ணாடி கத்திரி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கேட்டு சென்னையில் உள்ள புவியியல் குறியீடுகள் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.


வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி -எம்.பி. சி.வி.சண்முகம் புகார் மனு

 

 

 

ஈரோடு, பிப் .03

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது.

வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. தொகுதியில் புகார்உள்ள 238 பூத்களுக்கும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம்  மனு அளித்துள்ளோம். குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.

மறைந்த பின் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தலாம் என கால அவகாசம் இருந்தும் அவர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசட்டமன்ற உறுப்பினர்சரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை முறையாக பார்க்கவில்லை.

இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.

அண்மை செய்திகளை அறிய  https://puthiyaparimaanam.com செய்தி சேனலை காண தவறாதீர்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் திருப்புமுனை-கி.வீரமணி

தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த ஈரோடு தேர்தல் இருக்கும்.

ஈரோடு, பிப் .03

ஈரோட்டில் இன்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பேரறிஞர் அண்ணா நினைவு நாளான இன்று ஈரோட்டில் திராவிடர் கழகத்தின் சார்பில் சமூக நீதி, மாநில உரிமை, சேது சமுத்திர கால்வாய் திட்டம்  இதையெல்லாம் மையப்படுத்தி பிரச்சாரத்தை ஈரோட்டில் தொடங்க இருக்கின்றோம்.

அதற்கு முன்பாக வெற்றி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இல்லத்தில் திருமகன் ஈவெரா படத்திற்கு மாலை அணிவித்தேன். ஈரோடு எல்லாவற்றிற்கும் வழிகாட்டக்கூடிய ஒரு தனித்த அரசியல் களம். ஆகவே இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி இருக்கும்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும். திராவிட மாடல் ஆட்சியின் தமிழ்நாட்டில் உண்மையான செயல்படக்கூடிய அரசியல் கட்சிகள் எவை என்பதை மக்களுக்கு அடையாளம் காட்டக்கூடிய அளவில் இந்த தேர்தல் இருக்கும்.

மிகப்பெரிய அரசியல் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி இன்று அடமான பொருளாக மாறி இருக்கிறது. அதை பந்தாடிக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. அதற்கு விடை இந்த தேர்தலில் கிடைக்கும்.

அண்ணாமலை, எடப்பாடி சந்திப்பு குறித்த கேள்விக்கு, எதுவாக இருந்தாலும் நட்ட கணக்கில் இருந்தவர்கள் மீள முடியாது. அடமான பொருள் எப்போது திரும்பி மீட்கிறார்களோ அப்போது தான் அவர்கள் எதிர்க்கட்சி என்ற தகுதியை கூட பெற முடியும். இல்லையென்றால் அதையும் இழக்க கூடிய சூழ்நிலையை இந்த தேர்தல் ஏற்படுத்தும். நாளை நடப்பதை யார் அறிவார் என்ற பாட்டு பாடக்கூடிய பரிதாப நிலையில் அ.தி.மு.க. இருக்கிறது. இவ்வாறு திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கூறினார்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com/ செய்தி சேனலை தவறாது பாருங்கள்

 

சிறுவர்கள் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் சிறை

சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம்.

புதுச்சேரி, பிப் .03

புதுவை போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் சிறுவர்கள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்வது அதிகரித்து வருகிறது. வாகனம் ஓட்டும் சிறுவர்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, வாகனத்தின் பதிவுச் சான்று ஓராண்டிற்கு ரத்து செய்யப்படும்.

மேலும் வாகனத்தை ஓட்டிய சிறுவர்களுக்கு 25 வயது வரை பழகுனர் மற்றும் ஓட்டுனர் உரிமம் தகுதி ரத்து மற்றும் சிறார் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும். எனவே, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டாம்.

மேலும் புதுவையில் பலர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுவது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு முதல்முறை ரூ.ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, 3 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர் உரிமத்தின் ஒரிஜிஓட்டுநர் உரிமம்னல் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில்  ரத்து செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

அண்மை செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://puthiyaparimaanam.com  செய்தி சேனலை தவறாது பாருங்கள்.