Tuesday, April 23, 2024

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியீடு 

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியீடு

Congress party releases election promises for Lok Sabha elections

  • தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் வைத்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

  • கடந்த 10 ஆண்டுகளில் யாரெல்லாம் ஒதுக்கப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வழங்கும்வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி, ஏப். 05

மக்களவை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், “நீட் போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்தி கொள்ளலாம், குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.” போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

மக்களவை தேர்தல் அறிக்கைகளை தயாரிக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்காக, காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே ஒரு குழுவை அமைத்திருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இந்தக் குழு தேர்தல் அறிக்கை தொடர்பாக நாடு முழுவதும் ஆலோசனை கேட்டது.

மேலும் ஆலோசனை கேட்பதற்காக தொடங்கப்பட்ட இணையதளம் மற்றும் மின்னஞ்சல் மூலம் பல்வேறு தரப்பினரும் ஆலோசனைகளை வழங்கினர். இதன்அடிப்படையில் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தயாரித்தது.

அதன்படி, தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் வைத்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். விழாவில் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக பேசிய ப.சிதம்பரம், “நீதி என்பதை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் யாரெல்லாம் ஒதுக்கப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வழங்கும்வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. work, wealth, welfare என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மக்கள் நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும்.” என்று தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கிப் பேசினார்.

இதையும் படியுங்கள் : மேற்கு வங்கத்தில் சிஏஏ, என்ஆர்சி இரண்டையும் அனுமதிக்க மாட்டோம் – மம்தா பானர்ஜி

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்.
‎NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்.
குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும்.
தேசிய கல்வி கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.
2025ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு.
மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை.
இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.
ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது.
தேர்தல் பத்திரம் முறைகேடு தொடர்பாக விசாரணை செய்யப்படும்.
அரசியல் சாசனம் 8வது அட்டவணையில் ஏராளமான மொழிகள் சேர்க்கப்படும்.
பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.
ஆசிரியர்கள் கற்பிக்கும் வேலைகள் தவிர மற்ற வேலைகளில் ஈடுபடுவது தடுக்கப்படும்.
மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம்.
பணியில் இருக்கும்போது தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான பென்சன் ரூ.1000 ஆக அதிகரிப்பு
குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான எம்எஸ் சுவாமிநாதனின் பரிந்துரை அமல்படுத்தப்படும்.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பதற்காக நேரடி சந்தைகள் அமைக்கப்படும்.
மீனவர்களுக்கு டீசலுக்கான பழைய மானியம் தொடரும்.
அரசு தேர்வுகள், அரசு பதவிகளுக்கான விண்ணப்ப கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.
திருமணம், வாரிசுரிமை, தத்தெடுத்தலில் ஆண்கள், பெண்களுக்கு இடையேயான பாகுபாடுகள் களையப்படும்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
ஊடக சுதந்திரத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
LGBTQIA+ நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிப்படுவதற்கான சட்டம் இயற்றப்படும்.
10 ஆண்டுகளில் எவ்வித விவாதமும் இன்றி நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய சட்டங்களை ஆய்வு செய்து மாற்றங்கள் செய்யப்படும்.
பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும்.
பாஜகவில் சேர்ந்து குற்ற வழக்கில் இருந்து தப்பித்தவர்கள் மீண்டும் விசாரிக்கப்படுவார்கள்.
பொதுப்பட்டியலில் உள்ள பலதுறைகளை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து ஆய்வு செய்யப்படும்.
செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை.
ரயில்களில் ரத்து செய்யப்பட்ட மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை மீண்டும் கொண்டுவரப்படும்.
கட்சி தாவினால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகள் தானாகவே பறிபோகும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM) செயல்திறன் மற்றும் வாக்குச்சீட்டின் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை இணைக்கும் வகையில் தேர்தல் சட்டங்கள் திருத்தம்.
இவிஎம்மில் வாக்களித்ததை விவிபாட் இயந்திரத்தில் சரிபார்க்கும் முறை கொண்டுவரப்படும்.
மக்களின் உணவு, உடை, காதல் திருமணம் மற்றும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயணம் செய்து வசிப்பது போன்ற தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடமாட்டோம்.
மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் நியாயமற்ற முறையில் தலையிடும் அனைத்து சட்டங்களும் விதிகளும் ரத்து செய்யப்படும்.
அடுத்த 10 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்க இலக்கு.
பாஜக கொண்டுவந்த ஜிஎஸ்டி முறை மாற்றப்பட்டு ஜிஎஸ்டி 2.0 கொண்டுவரப்படும். புதிய ஜிஎஸ்டி முறையானது ஏழைகளுக்கு சுமையாக இல்லாத வகையில் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி என்ற கொள்கையின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
படகுகள் பறிமுதல், மீனவர்கள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை.
தேசிய அளவில் குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.400 ஆக நிர்ணயிக்கப்படும்.
அங்கன்வாடி பணியிடங்களை இரட்டிப்பாகி 14 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ராணுவ சேர்க்கைக்கான அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்.
10 ஆண்டுகளில் பாஜக கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்கள் திரும்பபெறப்படும்.
நூறுநாள் வேலைத்திட்ட ஊதியம் ரூ.400 ஆக அதிகரிக்கப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி, கால்நடை கல்லூரி, மருத்துவ கல்லூரி அமைக்கப்படும்.
மீனவ மக்களுக்கென தனி வங்கி, மீன்பிடிப்பதற்கென தனி துறைமுகங்கள் கொண்டுவரப்படும்.
மாலத்தீவுடனான உறவை செய்யவும் , சீனாவுடனான நமது எல்லையில் இருந்த நிலையை மீட்டெடுக்கவும் நடவடிக்கை.
ஜம்மு-காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து உடனடியாக வழங்கப்படும்.
ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு ரூ.25 லட்சமாக அதிகரிக்கப்படும்.
தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்படும்.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த பணி முறை நீக்கப்படும்.
பிஎம் கேர்ஸ் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் விசாரணை செய்யப்படும்.
21 வயதுக்கு கீழ் உள்ள திறமையுள்ள வளர்ந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித் தொகை வழங்கப்படும்.
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்பேத்கர் நூலகங்கள் அமைக்கப்படும்.
மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள குறைகளை களையும் வகையில் மறு ஆய்வு.
ஒருமுறை நிவாரண நடவடிக்கையாக மாணவர்களுக்கான கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும்.
வெறுப்பு பேச்சு, மதமோதல்கள், வெறுப்பு குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை.
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும்.
பழகுநர் பயிற்சி மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் தொகை வழங்கப்படும்.
டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு பொதுத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும்.

அண்மை செய்திகளை உடனுக்குடன் காண https://puthiyaparimaanam.com/ சேனலை பாருங்கள்

Related Articles

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles